நாகை-இலங்கை கப்பலில் கடந்த ஓராண்டில் 20 ஆயிரம் பேர் பயணம்

மாணவர்களை ஒருங்கிணைத்து அழைத்து வரும் 2 ஆசிரியர்களுக்கு இலவச டிக்கெட் வழங்கப்படுமென கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாகை,
நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் கப்பல் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். ‘செரியாபாணி’ என்ற பெயரில் இயக்கப்பட்ட இந்த கப்பலில் போதிய பயணிகள் வராத காரணத்தால் இந்த கப்பல் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 16-ந் தேதி ‘சுபம்’ நிறுவனத்தின் சார்பில் மீண்டும் ‘சிவகங்கை’ என்ற பெயரில் கப்பல் சேவை தொடங்கப்பட்டது. இந்த கப்பல் சேவை தொடங்கி நேற்றுடன் (16-ந் தேதி) ஓராண்டு நிறைவு பெற்றது. இதையடுத்து இரண்டாம் ஆண்டு தொடக்க விழா நேற்று நடந்தது. இதில், மும்மதத்தை சேர்ந்தவர்கள் கொடியசைத்து 2-ம் ஆண்டு சேவையை தொடங்கி வைத்தனர்.
பின்னர் கப்பல் நிறுவன உரிமையாளர் சுந்தர்ராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த ஒரு ஆண்டில் 20 ஆயிரத்து 98 பேர் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கும், இந்தியாவில் இருந்து இலங்கைக்கும் பயணம் செய்துள்ளனர். இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு செல்வதற்கு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாணவர்கள் 3 பகல், 2 இரவு இலங்கையில் தங்குவதற்கு கப்பல் டிக்கெட் கட்டணத்தோடு ரூ.9 ஆயிரத்து 999 என சிறப்பு சலுகை திட்டம் உள்ளது. மாணவர்களை ஒருங்கிணைத்து அழைத்து வரும் 2 ஆசிரியர்களுக்கு இலவச டிக்கெட் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.






