கொளத்தூரில் ‘அன்னம் தரும் அமுத கரங்கள்’ திட்டத்தின் 200-வது நாள்; அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்பு


கொளத்தூரில் ‘அன்னம் தரும் அமுத கரங்கள்’ திட்டத்தின் 200-வது நாள்; அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்பு
x

காலை உணவு திட்டத்தை முதல்-அமைச்சர் தொடங்கியிருப்பது மிகவும் பாராட்டத்தக்கது என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.

சென்னை,

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72-வது பிறந்த நாளையொட்டி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் ஏற்பாட்டில் "அன்னம் தரும் அமுதக்கரங்கள்" திட்டம் 2025 பிப்ரவரி 20-ந்தேதி முதல், 2026 பிப்ரவரி 19-ந்தேதி வரை 365 நாட்களும், நாள் ஒன்றுக்கு 1,000 நபர்களுக்கு மேல், வெவ்வேறு இடங்களில் காலை உணவு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை கடந்த பிப்ரவரி 20-ந்தேதி கொளத்தூரில் முதல்-அமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சி தொடங்கப்பட்டு 200-வது நாளான இன்று (07.09.2025), கொளத்தூர் மேற்கு பகுதி, 65-வது வட்டம், கொளத்தூர், தென் பழனி நகர், நேரு தெரு மற்றும் 64-வது வார்டு, கொளத்தூர், சீனிவாசன் நகர் மெயின் ரோடு ஆகிய இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு காலை உணவு வழங்கினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

“அன்னம் தரும் அமுத கரங்கள் திட்டம் இன்றுடன் 200-வது நாளை ஒட்டி மிகச் சிறப்பாக நிறைவடைந்துள்ளது. இது தமிழகமெங்கும் அனைத்து தொகுதிகளிலும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே என் விருப்பம். எனது நண்பர்கள் அமைச்சர்கள் அனைவரும் இதை ஏற்றுக் கொண்டு, ஏழை எளிய மக்களுக்கு காலை நேரத்தில் சிறப்பான உணவுகளை வழங்கி வருகிறார்கள்.

காலை உணவில் இரண்டு ஸ்வீட், வடை, இட்லி, இடியாப்பம் மற்றும் பொங்கல் உள்ளிட்ட உணவுகள் வழங்கப்படுகின்றன. இன்று நாடெங்கும் மக்கள், சமூக பாகுபாடு பாராமல், இத்திட்டத்தின் பயனை அனுபவித்து வருகின்றனர். பசி வந்தவுடனே வயிறு நிரம்ப உணவளிக்கும் காலை உணவு திட்டத்தை நம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தொடங்கியிருப்பது மிகவும் பாராட்டத்தக்கது.

“போற்றுவோர் போற்றட்டும், தூற்றுவோர் தூற்றட்டும்” – அதில் எங்களுக்குக் கவலை இல்லை. நாங்கள் நம்பும் கோட்பாடு, “ஒவ்வொருவரிடமும் அஞ்சாமல் நேரடியாக உரையாடுவோம்” என்பதுதான். அதுவே நம் தலைவர் தளபதியின் பாலிசி.

இன்று, 200-வது நாளையொட்டி, பல துறைகளைச் சேர்ந்த அமைச்சர்கள் இங்கு வந்துள்ளார்கள். என் நெருங்கிய நண்பரும் இந்த மாவட்டத்திற்கான செயலாளரும் அமைச்சருமான சேகர்பாபு இந்நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளார். இரண்டு இடங்களில் இன்று கொளத்தூர் தொகுதியில் காலை உணவு திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளனர், மக்களுக்கு வசதியாக இருக்க வேண்டும் என்பதே நோக்கம்.

இந்த திட்டம் முதல்-அமைச்சரின் மக்களுக்கான அக்கறையிலிருந்து பிறந்தது. தற்போது தமிழகத்தில் 200 தொகுதிகளுக்கு மேல் இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. நான் பல இடங்களில் ‘200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி!’ என்ற வாசகங்களைப் பார்த்தேன். உண்மையிலேயே, வெற்றியைப் பெறுவோம்! ஆனால் எளிமைக்காக ‘இருநூறு தொகுதிகள்’ என நாம் குறிப்பிடுகிறோம்.

இந்த இயக்கம் பெரியாரும், அண்ணாவும், தலைவர் கலைஞரும் வழிகாட்டியாக இருந்த திராவிட இயக்கத்தின் தொடர்ச்சி. இன்று சிலர் தனியாக அரசியலுக்கு வரலாம் – விஜய் போன்றவர்கள். ஆனால் அவர்களால் உண்மையான மாற்றத்தை கொண்டு வர முடியாது. எம்.ஜி.ஆர். கூட 30 ஆண்டுகள் தி.மு.க.வில் இருந்த பின்னரே அரசியல் பயணத்தில் வெற்றி பெற்றார்.

விஜயகாந்த் ஒரு நேரத்தில் 25 லட்சம் பேருடன் மாநாடு நடத்தினார், பிறகு 15 லட்சம் பேருடன். ஆனால் இதை பெரிதாக கருத வேண்டாம். அந்தக் கூட்டத்தில் 10, 12, 13 வயதுடைய சிறுவர்கள் ஓட்டு போடத் தெரியாதவர்கள் – அவர்கள் வந்தது வெறும் சினிமா பிரபலம் காரணமாகத்தான்.

நாங்கள் அப்படிப் போய் கவலைப்படுவதில்லை. நாங்கள் செய்ய வேண்டியது – ஆக்கபூர்வமான வளர்ச்சி. சென்னை மாநகரை எடுத்துக் கொண்டால், சிஎம்டிஏ திட்டத்தின் கீழ், புதிய கட்டடங்கள், பஸ் ஸ்டாண்டுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் என வளர்ச்சி தெளிவாகத் தெரிகிறது.

நான் படித்த "The Dr.Ambedkar Government Law College"–இல் இருந்த சென்னை நகரம், இன்று மூன்று மடங்கு வளர்ந்துள்ளது. மக்கள் தொகை 44 லட்சமாக இருந்த சென்னை, இன்று 1 கோடி 40 லட்சத்தைக் கடந்துள்ளது. பாரதியார் காலத்தில் இந்தியாவின் மக்கள் தொகை 30 கோடியாக இருந்தது; இன்று அது 143 கோடியாக உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 8 கோடிக்கு மேல் மக்கள் இருக்கின்றனர்.

இந்த வளர்ச்சி நம் அரசின் செயல்திறனைப் பிரதிபலிக்கிறது. இதற்காக நீங்கள் அரசுக்கு பாராட்டு தெரிவிக்க வேண்டும். நம் முதல்-அமைச்சர், யாருக்கும் அடிபணியாமல், மக்களுக்காகவே பணியாற்றி வருகிறார். மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறார் – தமிழ்நாட்டு மக்களின் உரிமைக்காக. தமிழ்நாடு முதல்-அமைச்சர் நூறு ஆண்டு காலம் வாழ வேண்டும் என்று நாங்கள் வாழ்த்துகிறோம்.”

இவ்வாறு ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.

1 More update

Next Story