2018-ல் நடந்த ‘நீட்’ தேர்விலும் முறைகேடு அம்பலம்: சென்னை மருத்துவக்கல்லூரி மாணவரிடம் விசாரணை - சி.பி.சி.ஐ.டி போலீசார் புதிய வழக்குப்பதிவு

2018-ல் நடந்த ‘நீட்’ தேர்விலும் முறைகேடு நடந்ததாக வந்த புகாரின் பேரில் சி.பி.சி.ஐ.டி போலீசார் புதிய வழக்கு ஒன்றை பதிவு செய்து உள்ளனர். இது தொடர்பாக சென்னை மருத்துவக்கல்லூரி மாணவரிடம் விசாரணை நடக்கிறது.
2018-ல் நடந்த ‘நீட்’ தேர்விலும் முறைகேடு அம்பலம்: சென்னை மருத்துவக்கல்லூரி மாணவரிடம் விசாரணை - சி.பி.சி.ஐ.டி போலீசார் புதிய வழக்குப்பதிவு
Published on

சென்னை,

2019-ம் ஆண்டு நடந்த நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் மூலம் முறைகேட்டில் ஈடுபட்டதாக வந்த புகார் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தேனி மருத்துவக்கல்லூரியில் இருந்து இந்த முறைகேடு தொடர்பாக பூகம்பம் வெடித்தது.

இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீஸ் டி.ஜி.பி. ஜாபர் சேட்டின் நேரடி மேற்பார்வையில் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். முறைகேட்டில் ஈடுபட்டதாக சென்னையை சேர்ந்த மருத்துவக்கல்லூரி மாணவர் உதித்சூர்யா உள்பட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து விசாரணை நடந்து வரும் நிலையில், இந்த முறைகேட்டில் புதிய பூகம்பம் ஒன்று தாக்கி உள்ளது. அதாவது கடந்த 2018-ம் ஆண்டு நடந்த நீட் தேர்விலும் முறைகேடு நடந்துள்ளதாக சென்னை மருத்துவக்கல்லூரி டீன் ஜெயந்தி சி.பி.சி.ஐ.டி போலீசில் புதிய புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.

அந்த புகார் மனு அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி போலீசார் புதிய வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளனர். அந்த புதிய வழக்கு அடிப்படையில் சென்னை மருத்துவக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படிக்கும் மாணவர் ஒருவரையும், அவரது தந்தையையும் பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த புதிய வழக்கு மூலம் நீட் தேர்வு முறைகேட்டில் மீண்டும் ஒரு அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com