

சென்னை,
சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக 204 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சபரிமலை அய்யப்பன் கோவிலில் 2026-27-ம் ஆண்டிற்கான மண்டல மகரவிளக்கு பூஜை யாத்திரை காலம் கடந்த 16-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யவும் தெற்கு ரெயில்வே விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது.
அதன்படி, பயணிகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், 204 சிறப்பு ரெயில் சேவைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னை-கொல்லம், திருவனந்தபுரம்- மங்களூரு, பன்வெல்-கோட்டயம், விசாகப்பட்டினம்-கொல்லம், ஐதராபாத்-கொல்லம் மற்றும் விஜயவாடா-கோட்டயம் ஆகிய வழித்தடங்களில் இந்த சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. முன்பதிவு நிலவரத்திற்கு ஏற்ப கூடுதல் ரெயில்களும் இயக்கப்பட உள்ளன.
சபரிமலை பக்தர்கள் அதிகம் வந்து செல்லும் முக்கிய சந்திப்புகளான கோட்டயம். செங்கனூர், எர்ணாகுளம் சந்திப்பு மற்றும் எர்ணாகுளம் டவுன் ஆகிய ரெயில் நிலையங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், பக்தர்கள் சிரமமின்றி டிக்கெட் எடுப்பதற்காக கோட்டயம் மற்றும் செங்கனூர் நிலையங்களில் 24 மணி நேரமும் செயல்படும் கூடுதல் டிக்கெட் கவுண்ட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. வெளிமாநில பக்தர்களுக்கு வழிகாட்ட தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் தெரிந்த ரெயில்வே ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தொடர் பயணத்திற்காக எர்ணாகுளம், கோட்டயம். செங்கனூர், திருச்சூர் நிலையங்களில் சிறப்பு அனுமதியுடன் டாக்சிகள் இயக்கப்படுகின்றன.
பக்தர்களின் பாதுகாப்பிற்காக ரெயில்வே பாதுகாப்பு படை மற்றும் கேரள ரெயில்வே போலீசார் இணைந்து தீவிர கண் காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மோப்ப நாய் சோதனை, கண்காணிப்பு கேமரா மற்றும் 24 மணி நேர உதவி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், அவசர மருத்துவ உதவிக்காக ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ குழுவினர் அடங்கிய விரைவு அதிரடிப்படை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மகரவிளக்கு தினத்தன்று கூட்டத்தை ஒழுங்குபடுத்த சிறப்பு அதிகாரிகள் குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.