

தூத்துக்குடி,
தூத்துக்குடி பிரையண்ட் நகர் பகுதியில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2,070 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்த தனிப்படை போலீசார், மூன்று பேரை கைது செய்து, கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி மாநகரில் மதுபானக் கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு தற்போது மூன்று கடைகள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. இதனால் மதுபானம் வாங்க மக்கள் நீண்ட தூரம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதுடன், கடைகளில் நீண்ட வரிசைகளும் காணப்படுகின்றன. இந்தச் சூழலைப் பயன்படுத்தி, மதுவுக்கு மாற்றாக போதை மாத்திரைகளை சட்டவிரோதமாக விற்பனை செய்யும் கும்பல்கள் செயல்பட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் பிரையண்ட் நகர் பகுதியில் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, இரண்டு இருசக்கர வாகனங்களில் சந்தேகத்திற்கிடமாக இருந்த மூன்று பேரை பிடித்து சோதனையிட்டதில், அவர்கள் மறைத்து வைத்திருந்த 2,070 போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணையில், கைது செய்யப்பட்டவர்கள் இளையான்குடியைச் சேர்ந்த அருண் ஜீவா (29), தூத்துக்குடி முனியசாமிபுரத்தைச் சேர்ந்த டிக்சன் (26), சிவபால கணேஷ் (28) என்பது தெரியவந்தது. மேலும், மதுரையில் இருந்து மொத்தமாக போதை மாத்திரைகளை வாங்கி வந்து, தூத்துக்குடியில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்ததும் போலீஸ் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இதையடுத்து, மூவரையும் கைது செய்த போலீசார், போதை மாத்திரைகள் மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து தென்பாகம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்குப் பின்னணியில் செயல்படும் முக்கிய போதைப்பொருள் நெட்வொர்க் குறித்து தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் திருமுருகன் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.