21 சமூகநீதி போராளிகளின் மணிமண்டபம்: மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்


21 சமூகநீதி போராளிகளின் மணிமண்டபம்: மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 28 Jan 2025 10:31 AM IST (Updated: 28 Jan 2025 11:57 AM IST)
t-max-icont-min-icon

மறைந்த முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமியின் நினைவரங்கத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

விழுப்புரம்,

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், 2 நாள் பயணமாக விழுப்புரம் மாவட்டத்திற்கு நேற்று மாலை வருகை தந்தார். அவருக்கு மாவட்ட எல்லையான ஓங்கூரில் திமுகவினர், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். திண்டிவனம் ரவுண்டானாவுக்கு வந்ததும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், காரில் இருந்து கீழே இறங்கி கையசைத்தவாறும், வணக்கம் தெரிவித்தபடியும் நடந்தார். அப்போது சாலையின் இருபுறமும் நின்ற மக்களிடம் குறைகளை கேட்டார். மேலும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களையும் பெற்றார்.

இந்த நிலையில், இன்று 2-ம் நாள் கள ஆய்வில் விழுப்புரம் வழுதரெட்டியில் ரூ.4 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மறைந்த முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமியின் நினைவு அரங்கம் மற்றும் இடஒதுக்கீட்டு போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிர்நீத்த 21 சமூகநீதி போராளிகளின் தியாகத்தை போற்றும் வகையில் ரூ.5 கோடியே 70 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள மணிமண்டபம் ஆகியவற்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தொடர்ந்து ஏ.கோவிந்தசாமியின் வெண்கல சிலைக்கு முதல்-அமைச்சர் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் நினைவு அரங்கம், மணிமண்டபத்தை பார்வையிட்டார். இவ்விழாவில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

பின்னர் அதன் அருகில் நடைபெறும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, பல்வேறு துறைகள் சார்பாக ஏழை, எளிய மக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார். இவ்விழாவை முடித்துக்கொண்டு இன்று மதியமே அவர், சென்னைக்கு புறப்பட்டுச் செல்கிறார்.

1 More update

Next Story