

சென்னை,
மேற்கு ஆசியாவில் போர் நீடித்து வரும் நிலையில் துபாய், சவுதி அரே பியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், இங்கிருந்து இந்தியா திரும்ப முடியாமல் பலர் தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், வளைகுடா நாடுகளில் தவித்து வரும் இந்தியர்களை அழைத்து வருவதற்கு வசதியாக சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இருந்து இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு இண்டிகோ விமான நிறுவனத்தின் சார்பில் 10 சிறப்பு விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், துபாயில் இருந்து சிறப்பு விமானம் மூலமாக 217 பேர் சென்னை வந்தடைந்துள்ளனர். வாண்வெளியின் சூழலை பொறுத்து துபாய் நாட்டின் எமிரேட்ஸ் விமான நிறுவனம் நேற்றிரவு முதல் ஒரு சில விமானங்களை மட்டும் இயக்கி வருகிறது. இந்த விமானத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 217 பேர் இன்று அதிகாலை சென்னை வந்தனர். அவர்களை குடும்பத்தினர் கட்டியணைத்து கண்ணீர் மல்க வரவேற்றனர்.
இதைபோல ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் மஸ்கட் விமான சேவையை இன்று முதல் மீண்டும் தொடங்குகிறது. டெல்லி, திருச்சி, கொச்சி, கோழிக்கோடு, மும்பையில் இருந்து மஸ்கட்டுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை தொடங்குகிறது. பஹ்ரைன், குவைத், கத்தார், சவுதி, ஐக்கிய அரபு அமீரகத்துக்கு ஏர் இந்தியா விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.