சென்னையில் ஒரே நாளில் 10 நீர்வழிக்கால்வாய்களில் 218 மெட்ரிக் டன் ஆகாயத்தாமரை, வண்டல்கள் அகற்றம்!

தொடர்ச்சியாக, நீர்நிலைகளில் ஆகாயத்தாமரைகள் அகற்றி, தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னையில் ஒரே நாளில் 10 நீர்வழிக்கால்வாய்களில் 218 மெட்ரிக் டன் ஆகாயத்தாமரை, வண்டல்கள் அகற்றம்!
Published on

சென்னை,

வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள நீர்வழிக்கால்வாய்களில் ஆகாயத்தாமரைகள் மற்றும் வண்டல்கள் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்று (09.07.2026) ஒருநாள் மட்டும் வியாசர்பாடி கால்வாயில் 19 மெட்ரிக் டன் கழிவுகள் உள்பட 10 நீர்வழிக்கால்வாய்களில் 218 மெட்ரிக்டன் ஆகாயத்தாமரைகள் மற்றும் வண்டல்களும் அகற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

தூர்வாரும் பணி தீவிரம்

தமிழ்நாடு முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின்படி, வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள நீர்நிலைகள், கால்வாய்கள், மழைநீர் வடிகால்கள் மற்றும் வண்டல் வடிகட்டித் தொட்டிகளில் தூர்வாருதல் மற்றும் கழிவுகள் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, பருவமழைக்காலங்களில் பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள நீர்வழிக்கால்வாய்கள் மற்றும் நீர்நிலைகளில் ஆம்பிபியன் வாட்டர் மாஸ்டர் (Amphibian Water Master), ஆம்பிபியஸ் எஸ்கவேட்டர் (Amphibious Excavator), மினி ஆம்பிபியன் (Mini Amphibian) ரொபோடிக் மல்டிபர்பஸ் எஸ்கவேட்டர் (Robotic Multipurpose Excavator) இயந்திரங்கள் மூலம் சுழற்சி முறையில் தூர்வாரும் பணி மற்றும் மிதக்கும் கழிவுகளை அகற்றும் பணி நாள்தோறும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

218 மெட்ரிக் டன்

இதில் நேற்று (09.07.2026) ஒருநாள் மட்டும் வியாசர்பாடி கால்வாயில் 19 மெட்ரிக் டன், பக்கிங்ஹாம் கால்வாயில் 23 மெட்ரிக் டன், நொளம்பூர் கால்வாயில் 20 மெட்ரிக் டன், போரூர் ஏரியில் 31 மெட்ரிக் டன், கொரட்டூர் ஏரி கால்வாயில் 46 மெட்ரிக் டன், வேளச்சேரி ஏரியில் 20 மெட்ரிக் டன், கூவம் கால்வாயில் 20 மெட்ரிக் டன், வீராங்கல் ஓடை கால்வாயில் 19 மெட்ரிக் டன், தாதாங்குப்பம் கால்வாயில் 20 மெட்ரிக் டன் என மொத்தம் 218 மெட்ரிக் டன் ஆகாயத்தாமரைகள் மற்றும் வண்டல்கள் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக, கால்வாய்கள் மற்றும் நீர்நிலைகளில் ஆகாயத்தாமரைகள் அகற்றி, தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com