

சென்னை,
இந்திய ரெயில்வேயில் ரெயில் மற்றும் ரெயில் நிலையங்களில் புகை பிடிப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. ரெயில்வே சட்டம், 1989-ன் பிரிவு 167-ன் படி தண்டனைக்குரிய குற்றமாகும். பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்த தடை அமல்படுத்தப்படுகிறது. இதனை மீறுபவர்களுக்கு ரூ.200 முதல் 500 வரை அபராதம் அல்லது 6 மாதம் சிறைதண்டனை விதிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக ரெயில்வே பாதுகாப்பு படையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும், பலர் ரெயில் மற்றும் ரெயில் நிலையங்களில் புகைபிடிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர். அவர்களுக்கு ரெயில்வே பாதுகாப்பு படையினர் அபராதம் விதித்துள்ளனர்.
அந்த வகையில், சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் கடந்த ஆண்டு (2025) ஜனவரி முதல் டிசம்பர் வரையில் ரெயில்வே வளாகம் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் புகை பிடித்ததாக 219 பயணிகளுக்கு ரெயில்வே பாதுகாப்பு படையினர் அபராதம் விதித்துள்ளனர்.
அவர்களிடம் இருந்து ரூ.43 ஆயிரத்து 800 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. சிறிய அலட்சியம் கூட பெரிய அபாயத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால் புகை பிடிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என ரெயில்வே பாதுகாப்பு படையினர் மூலம் பயணிகளுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.