திருப்பூரில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 22 கியாஸ் சிலிண்டர்கள் பறிமுதல்!

உரிமம் இன்றி கியாஸ் சிலிண்டர்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
திருப்பூரில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 22 கியாஸ் சிலிண்டர்கள் பறிமுதல்!
Published on

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே போத்தம்பாளையம் கிராமம் குழிக்காட்டுத் தோட்டம் பகுதியில், வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர்கள் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக குடிமைப்பொருள் பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து நேற்று மதியம் பறக்கும் படை தனி தாசில்தார் கனிமொழி தலைமையில், தனி வருவாய் ஆய்வாளர் ராமமூர்த்தி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது குடியிருப்பு பகுதியில் உள்ள காலி இடத்தில் ஏராளமான கியாஸ் சிலிண்டர்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ்குமார் என்பவர், வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர்களை உரிமம் பெறாமல் வணிக ரீதியாக பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து அங்கிருந்த 22 வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும், உரிமம் இன்றி கியாஸ் சிலிண்டர்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்ததாக ராஜேஷ்குமார் மீது திருப்பூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com