

காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் பழைய ரெயில் நிலையம் அருகே கஞ்சா விற்பனை செய்த சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த வாலிபரை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 22 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.
ஆன்மிக நகராகவும், பட்டு நெசவுத் தொழிலின் மையமாகவும் விளங்கும் காஞ்சீபுரத்தில், உள்ளூர் மக்கள் மட்டுமின்றி தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளும், தொழிற்சாலை தொழிலாளர்களும் வந்து செல்கின்றனர். இதனால் இங்குள்ள ரெயில் நிலையங்களில் எப்போதும் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும்.
இந்த நிலையில், காஞ்சீபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பழைய ரெயில் நிலையம் அருகே வாலிபர் ஒருவர் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் மணிவண்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார், அங்குள்ள புதர் பகுதியில் மறைந்திருந்த வாலிபரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். பிடிபட்ட வாலிபரை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில், அவர் சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த கிரீஸ் (வயது 19) என்பது தெரியவந்தது.
மேலும் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சாவை வாங்கி வரும் கிரீஸ், காஞ்சிபுரம் ரெயில் நிலையப் பகுதிகளில் மறைந்திருந்து, அங்கு வரும் தொழிற்சாலை ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்ததை அந்த வாலிபர் ஒப்புக்கொண்டார். அதை தொடர்ந்து, அந்த வாலிபரிடம் இருந்த 22 கிலோ எடையுள்ள கஞ்சா கைப்பற்றப்பட்டது.
கைது செய்யப்பட்ட கிரீஸ், காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். காஞ்சீபுரத்தில் ஒரே நேரத்தில் 22 கிலோ கஞ்சா பிடிபட்டது இதுவே முதல்முறை என்பதால் இந்த சம்பவத்தில் கிரீஸுக்கு கஞ்சா சப்ளை செய்த ஆந்திராவைச் சேர்ந்த முக்கியப் புள்ளிகள் யார்? இதன் பின்னணியில் செயல்படும் நெட்வொர்க் என்ன? என்பது குறித்து சைபர் கிரைம் மற்றும் தனிப்படை போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.