22 ஆயிரம் வழக்குகள் நிலுவை; சமரசமாக பேசினால் எளிதில் தீர்வு

விட்டுக்கொடுப்பவர்கள், கெட்டுப்போவதில்லை எனவும் மாவட்டத்தில் 22 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், சமரசமாக பேசினால் வழக்குகள் எளிதில் தீர்வு காணப்படும் என மக்கள் நீதிமன்றத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி பூரண ஜெய ஆனந்த் தெரிவித்தார்.
22 ஆயிரம் வழக்குகள் நிலுவை; சமரசமாக பேசினால் எளிதில் தீர்வு
Published on

மக்கள் நீதிமன்றம்

புதுக்கோட்டை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், குடும்ப நல வழக்குகளுக்கான சிறப்பு மக்கள் நீதிமன்றம் புதுக்கோட்டை கோர்ட்டில் நேற்று நடைபெற்றது. இந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான பூரண ஜெய ஆனந்த் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. அனைத்து வழக்குகளையும் ஒரே நேரத்தில் முக்கியத்துவம் கொடுத்து முடித்து விட முடியாது. கால விரயமும், பொருள் விரயமும் தவிர்க்கப்பட வேண்டும். "விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை'' அந்த அடிப்படையில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து சமரசமாக பேசினால் வழக்குகள் எளிதில் தீர்மானிக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும்.

சமரசத்தினால் தீர்வு

"சாட்சிக்காரர் காலில் விழுவதை விட சண்டைக்காரர் காலில் விழுவதே மேல்" என முதுமொழி உண்டு. அதன் அடிப்படையில் இருதரப்பினர்கள் ஒருவக்கொருவர் விட்டுக்கொடுத்து தங்களது எதிர்தரப்பினர்களுடன் சமரசம் பேச முற்பட்டாலே அவர்களுக்கிடையேயான அனைத்து பிரச்சினைகளும் இறுதியாகவும், சுமூகமாகவும் தீர்க்கப்பட்டு விடுகிறது. சமரசத்தீர்வினால் மேல்முறையீடு இல்லாமல் வழக்கு இறுதி நிலையை அடைகிறது. நீதிமன்ற கட்டணமும் திரும்பப் பெறப்படுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் புதுக்கோட்டை மாவட்ட குடும்ப நல நீதிபதி ஜெயந்தி, கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி வசந்தி, அத்தியாவசிய பண்டங்கள் சிறப்பு மாவட்ட நீதிபதி பாபுலால், மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தின் செயலாளர் ராஜேந்திர கண்ணன், முதன்மை சார்பு நீதிபதி மற்றும் தலைமை குற்றவியல் நீதிபதி (பொறுப்பு) சசிக்குமார், நீதித்துறை நடுவர் எண்-1 நீதிபதி ஜெயந்தி ஆகிய நீதிபதிகள் கொண்ட 5 அமர்வுகள் மற்றும் தாலுகா நீதிமன்றங்களில் தலா ஒரு அமர்வு என மொத்தம் 11 அமர்வுகளில் நடைபெற்றது.

119 வழக்குகள் சமரச தீர்வு

நீதிமன்ற நிலுவையில் உள்ள வழக்குகள், குடும்ப நல வழக்குள், வாகன விபத்து இழப்பீடு வழக்குகள், உரிமையியல் வழக்குகள், காசோலை மோசடி மற்றும் வங்கி வராக்கடன் வழக்குகள் என மொத்தம் 1,708 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு 119 வழக்குகள் தீர்வு காணப்பட்டன. இதில் ரூ.2 கோடியே 15 லட்சத்து 76 ஆயிரத்து 121 தொகைக்கான சமரச முடிவு வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com