வடகிழக்கு பருவமழை தொடர்பான பணிகளில் 22 ஆயிரம் பேர்: சென்னை மாநகராட்சி தகவல்

சென்னையில் நேற்று காலை 8.30 மணி முதல் இன்று காலை 8.30 மணி வரை சராசரியாக 17.94 மி.மீட்டர் மழை பெய்துள்ளது என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வடகிழக்குப் பருவமழை தொடர்பான நடவடிக்கைகள் குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
மழையின் அளவு 17.10.2025 அன்று காலை 8 மணி முதல் இன்று (25.10.2025) காலை 8.30 மணி வரை சராசரியாக 197.80 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. 24.10.2025 அன்று காலை 8.30 மணி முதல் இன்று (25.10.2025) காலை 8.30 மணி வரை சராசரியாக 17.94 மி.மீட்டர் மழை பெய்துள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 215 இடங்களில் நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த மையங்களில் உணவு, சுகாதார வசதி, குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளன. நிவாரண மையங்களுக்கு உணவு வழங்க ஏதுவாக 106 மைய சமையல் கூடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு உணவு வழங்கும் வகையில் 22.10.2025 அன்று முதல் 24.10.2025 வரை 1,49,200 நபர்களுக்கு காலை உணவும், 2,25,700 நபர்களுக்கு மதிய உணவும் 30,750 நபர்களுக்கு இரவு உணவும் என மொத்தம் 4,05,650 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு நோய்த்தொற்று பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கும் வகையில், 17.10.2025 அன்று முதல் 24.10.2025 வரை 303 நிலையான மருத்துவ முகாம்கள், 144 நடமாடும் மருத்துவ முகாம்கள் என மொத்தம் 447 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 17,970 நபர்கள் பயனடைந்துள்ளனர். இன்று (25.10.2025) மாநகராட்சிப் பகுதிகளில் 85 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது.
தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்களை மீட்டு நிவாரண மையங்களில் தங்க வைப்பதற்காக 103 படகுகள் தயார் நிலையில் உள்ளது. இதில் 36 படகுகள் மாநகராட்சிக்கு சொந்தமாக வாங்கி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சார்ந்த 60 நபர்கள், மாநில பேரிடர் மீட்புப் படையைச் சார்ந்த 30 நபர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
மழைநீர் தேங்கும் இடங்களில் மழைநீரை வெளியேற்றும் வகையில் பல்வேறு திறன் கொண்ட 1,436 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளன. 150 எண்ணிக்கையில் 100Hp மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளன. டிராக்டர் மேல் 500 மோட்டார் பம்புகள் பொருத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளன. இதன் மூலம் மழைநீர் தேங்கும் இடங்களில் மழைநீர் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.
2 ஆம்பிபியன், 3 ஆம்பிபியன் எஸ்கவேட்டர்கள், பல்வகை பயன்பாட்டிற்கான 6 ரோபோடிக் எஸ்கவேட்டர்கள், 3 மினிஆம்பிபியன், 7 சூப்பர் சக்கர் வாகனங்கள், 15 மரக்கிளை அகற்றும் சக்திமான் வாகனங்கள், உட்பட மொத்தம் 478 வாகனங்கள் மற்றும் இயந்திரங்களும் தயார் நிலையில் உள்ளன.
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் விழும் மரங்களை அகற்றுவதற்காக ஹைட்ராலிக் மர அறுவை இயந்திர வாகனங்கள் 15, ஹைட்ராலிக் ஏணி 2, கையடக்க மர அறுவை அறுப்பான் 224, டெலஸ்கோபிக் மர அறுவை இயந்திரங்கள் 216 என மொத்தம் 457 மர அறுவை இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன.
17.10.2025 முதல் 24.10.2025 வரை மழையின் காரணமாக விழுந்த 39 மரங்களும் அகற்றப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளில் மழைநீர்த் தேக்கம் இன்றி போக்குவரத்து சீராக உள்ளது.
மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்கள், கால்வாய்கள், வண்டல் மண் சேகரிப்புத் தொட்டிகள் ஆகியவற்றில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இப்பணிகள் தொடர்ச்சியாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
24 மணி நேரமும் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் பொதுமக்களிடமிருந்து 150 இணைப்புகளுடன் கூடிய 1913 என்ற உதவி எண்ணிற்கு வரும் புகார்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வரும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சியில் அலுவலர்கள், பொறியாளர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட 22 ஆயிரம் பேர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






