

கோவை,
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோவை விமான நிலையத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
2,200 ஏரிகளை தூர்வார நடவடிக்கை
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அரசு, கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ள நேரத்தில் மழைநீரை சேமிக்க வேண்டும் என்ற வகையிலே, குடிமராமத்து திட்டத்தை தொடங்கி முதல்கட்டமாக 100 கோடி ரூபாய் ஒதுக்கி ஆயிரத்து 519 ஏரிகளில் இன்றைக்கு குடிமராமத்துப் பணி நடைபெற்று வருகின்றது. மேலும், 300 கோடி ரூபாய் திட்டத்தில், 2 ஆயிரத்து 200 ஏரிகள் தூர்வாருவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
விரைவில் மேட்டூர் அணையும் தூர்வாரப்படும் என்ற செய்தியை தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்த வாரம், மேட்டூர் அணை தூர்வாரப்படும். அதோடு மட்டுமல்லாமல், தமிழகத்திலுள்ள பல்வேறு அணைகளும் மழைநீரை அதிக அளவில் சேமிக்கின்ற வகையில் தூர்வாரப்படும்.
காப்பீடு திட்டத்தின் மூலம் நிதியுதவி
அதே போல, வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு வங்கிகள் மூலமாக இன்றைக்கு நிவாரணம் அளிக்கப்பட்டு வருகிறது. வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலமாக நிதி பெற்றுத் தருவதற்குண்டான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சுமார் 6 ஆயிரத்தில் இருந்து 7 ஆயிரம் கோடி ரூபாய் வரை காப்பீட்டுத் திட்டத்தின் மூலமாக விவசாயிகளுக்கு நிதியுதவி பெறுவதற்கு அரசினால் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட கலெக்டர்களிடமும் நேரடியாக, தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் அலுவலகத்தில் இருந்து காணொலிக்காட்சி மூலமாக மாவட்டத்திலுள்ள நிர்வாகத்தை ஆய்வு செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் விடுபட்டு இருந்தால்...
கோவை, மதுரை, சேலம், திருச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. இந்த ஆய்வு பணிகளை, அந்தந்த மாவட்டங்களில் குடிநீர் திட்டப் பணிகள் எந்த அளவில் நடந்து வருகிறது, வறட்சியால் எங்காவது குடிநீர் பிரச்சினை ஏற்பட்டிருந்தால், அதை உடனடியாக தீர்த்து வைக்க வேண்டும் என்று உத்தரவு வழங்கப்பட்டிருக்கிறது.
அதே போல, வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் யாரேனும் விடுபட்டு இருந்தால், அவர்களுக்கும் நிதியுதவி வழங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.