மருதுபாண்டியர்களின் 221 வது நினைவு நாள் - அமைச்சர்கள் மரியாதை

ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்ட மருதுபாண்டியர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.
மருதுபாண்டியர்களின் 221 வது நினைவு நாள் - அமைச்சர்கள் மரியாதை
Published on

சிவகங்கை:

இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து சுதந்திர போரிட்டதால் ஆங்கிலேயர்களால் 1801-ம் ஆண்டு அக்டோபர் 24-ந் தேதி சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் மருதுபாண்டியர்கள் தூக்கிலிடப்பட்டார்கள். இதனையடுத்து அரசு சார்பில் மருதுபாண்டியர்களின் நினைவாக மணிமண்டபம் அமைக்கப்பட்டு இங்கு ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 24-ந் தேதி மருது பாண்டியர்களின் நினைவு தினம் அரசு விழாவாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று மருதுபாண்டியர்களின் நினைவு நாளை முன்னிட்டு ஏராளமான அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், பல்வேறு அமைப்பினர் கலந்துகொண்டு மருதுபாண்டியர்களின் சிலைகள் மற்றும் நினைவுதூணுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ஆகியோர் மருதுபாண்டியர்களின் திருவுருவச்சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com