ஒரே நாளில் 23 பேர் ‘டிஸ்சார்ஜ்’: தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு

தமிழகத்தில் கொரோனா தொற்று சிகிச்சை முடிந்து நேற்று ஒரே நாளில் 23 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர். மேலும் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,204 ஆக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் 23 பேர் ‘டிஸ்சார்ஜ்’: தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு
Published on

சென்னை,

நேற்று ஒரே நாளில் மட்டும் தமிழகத்தில் புதிதாக 31 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,204 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று ஒரே நாளில் 23 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ், சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் நேற்று நிருபர்களை சந்தித்தார். முக கவசம் அணிந்தபடி பேட்டி அளித்தபோது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பை உறுதி செய்ய 16 அரசு பரிசோதனை நிலையங்களும், 9 தனியார் பரிசோதனை மையங்களும் உள்ளன.

நேற்று (14-ந்தேதி) ஒரே நாளில் 31 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 21 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள். மேலும் ஒருவர் வெளிமாநிலங்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். மற்ற 9 பேரும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் ஆவர். 10 வயதுக்கு உட்பட்ட 33 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு உள்ளது.

நேற்று ஒரே நாளில், திண்டுக்கல் மாவட்டத்தில் 9 பேரும், சென்னையில் 5 பேரும், தஞ்சாவூரில் 4 பேரும், தென்காசியில் 3 பேரும், மதுரை, நாகப்பட்டினம், ராமநாதபுரம் ஆகிய மாவட்டத்தில் தலா 2 பேரும், கடலூர், சேலம், கன்னியாகுமரி, சிவகங்கை ஆகிய மாவட்டத்தில் தலா ஒருவரும் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் பரிசோதனை மையங்களை பொருத்தவரை அனைத்து நாட்களும் இயங்கி வருகிறது. பணியாளர்கள் இல்லாமலோ, உபகரணங்கள் இல்லாமலோ பரிசோதனை மையங்கள் இயங்கவில்லை என்பது முற்றிலும் தவறு.

முதல்-அமைச்சர் அதிகபடியானோருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார். இதையடுத்து பரிசோதனை மைய பணியாளர்களை அதிகரித்துள்ளோம், எந்திரங்களை அதிகரித்துள்ளோம், தேவையான பரிசோதனை உபகரணங்களை வாங்கியுள்ளோம். 24 மணி நேரமும் வேலை நடைபெற கூடுதல் பணியாளர்களை அமர்த்தி உள்ளோம். பொதுமக்களுக்கு தொண்டை சளி மற்றும் ரத்த பரிசோதனை செய்யும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் என்-95, தனிநபர் பாதுகாப்பு உடை, 3 அடுக்கு முக கவசங்கள் உள்ளிட்டவைகளை கட்டாயமாக அணிய வேண்டும். பொதுமக்களில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், புற்றுநோய் உள்ளோர், சர்க்கரை நோய் உள்ளவர்கள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் என அனைவரும் 3 அடுக்கு முக கவசங்களை அணிய வேண்டும். மற்ற அனைவரும் சாதாரண முக கவசங்களை வீட்டில் செய்து அணிந்தால் போதும். இதற்கான அறிவுரைகள் அனைத்தும் சுகாதாரத்துறை இணையதளத்தில் உள்ளது.

தமிழகத்தில் தற்போது வரை 81 பேர் கொரோனா வைரஸ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். நேற்று ஒரே நாளில் 23 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை எங்களிடம் வந்தவர்களுக்கு பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த பரிசோதனை செய்யும் பணியை உள்ளாட்சித்துறை, போலீஸ் துறை என அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செய்து வருகிறோம். இதை கண்காணிக்க 12 பேர் கொண்ட ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் தலைமையில் குழுவும் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

தமிழகம் முன்னோடி மாநிலமாக இருப்போம். போலீசார் உதவியுடன் பாதிக்கப்பட்டவர்களின் அருகே உள்ள செல்போன் எண்களை கண்டறிந்து அவர்களுக்கு பரிசோதனை செய்து வருகிறோம்.

இதுவரை தமிழகத்தில் 12 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். சிகிச்சை முடிந்த பின்னரும் 14 நாட்கள் கண்காணிப்பில் வைத்து தான் வீட்டுக்கு அனுப்புகிறோம். அதனால் தான் வீடு சிகிச்சை பெறுகிறவர்கள் வீடு திரும்ப நாட்கள் ஆகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com