

கோவை மாவட்ட சிறுபான்மை நலத்துறை சார்பில் ரூ.23 லட்சத்தில் 244 பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கினார்.
நலத்திட்ட உதவிகள்
கோவை மாவட்ட சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் கிராந்திகுமார் தலைமை தாங்கினார். மேயர் கல்பனா முன்னிலை வகித்தார்.
இதில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு 244 பேருக்கு ரூ.23 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறும்போது, வெளிநாட்டில் வாழ்வாதாரத்துக்கு செல்பவர்களில் சிலர் போலி ஏஜெண்டுகளால் அங்கு சிக்கித்தவித்து வருகிறார்கள். அவர்களை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
பின்னர் அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மக்களின் தேவைகள்
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் மக்களின் தேவைகளை கேட்டறிந்து கலெக்டர் மூலம் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. சிறுபான்மை மக்களின் வாழ்வாதாரம் உயர இதுபோன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் என்னென்ன தேவைகள் இருக்கிறது என்பதை கேட்டு அறிந்து அவற்றை நிறைவேற்றும் அரசாக திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது.
இஸ்ரேல்-காசா இடையே போர் ஏற்பட்டு உள்ளதால், இஸ்ரேல் நாட்டில் சிக்கித் தவித்துக்கொண்டு இருக்கும் தமிழர்களை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி இதுவரை 132 பேரை மீட்டு அழைத்து வந்து உள்ளோம். அங்கிருந்து வந்தவர்கள் விடுத்த கோரிக்கைகள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.
கூடுதல் திட்டங்கள்
சிறுபான்மை நலத்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. அந்த நிதியில் இருந்துதான் தற்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு கொடுத்து வந்த நிதி நிறுத்தப்பட்டு இருக்கிறது.
மத்திய அரசு 60 சதவீதமும், மாநில அரசு 40 சதவீதம் என திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறோம். கண்டிப்பாக நாடாளுமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இந்தியா கூட்டணி ஆட்சியை கைப்பற்றும். அதன் பிறகு கூடுதல் திட்டங்களை கேட்டு பெற்று தருவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட சிறுபான்மை நலத்துறை அதிகாரி விஷ்ணுவர்த்தினி, முன்னாள் எம்.எல்.ஏ. நா.கார்த்திக், பல்சமய நல்லுறவு இயக்க தலைவர் முகமது ரபி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
4 பேருக்கு வரவேற்பு
முன்னதாக இஸ்ரேலில் இருந்து கோவையை சேர்ந்த 4 பேர் விமானம் மூலம் கோவை வந்தனர். கோவை விமான நிலையத்துக்கு சென்ற அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவர்களை வரவேற்துடன் அவர்களை வீட்டுக்கு வழியனுப்பி வைத்தார்.
I