

சேலம்,
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள வரகூர் கிராமத்தை சேர்ந்த வர் திருமலைவாசன், விவசாயி. இவருடைய மனைவி லலிதா (வயது 23). இவர்களுக்கு திருமணம் ஆகி 6 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு ஹர் சன் ராஜ் (5), புவன்ராஜ் என்ற 6 வயது ஆண் குழந்தை இருந்தது.
இந்த நிலையில் திருமலைவாசனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 மாதங்களுக்கு முன்பு லலிதா தனது கணவரை பிரிந்து விட்டார். பின்னர் அவர் தனது 1 1\2 வயது கைக்குழந்தையுடன் சிறுவாச்சூரில் உள்ள தாயார் வீட்டில் வசித்து வந்தார். அதே நேரத்தில் மூத்த மகன் ஹர் சன் ராஜ் தந்தையுடன் உள்ளான்.
இதனிடையே கடந்த ஏப்ரல் மாதம் 11-ந் தேதி குழந்தை புவன்ராஜிக்கு திடீரென வலிப்பு வந்து உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனே குழந்தையை ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு லலிதா கொண்டு சென்றார். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர், அது இறந்து விட்டதாக கூறினார்.
இதனிடையே குழந்தை சாவில் சந்தேகம் இருப்பதாக தலைவாசல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் குழந்தை மர்மமான முறையில் இறந்துள்ளதாக கூறி வழக்குப்பதிவு செய்து குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்.
இதனிடையே கடந்த 10 நாட்களுக்கு முன்பு லலிதா திடீரென மாயமானார். அதேநேரத்தில் இறந்த குழந்தையின் உடல்பாகங்கள் பிரேதபரிசோதனை செய்யப்பட்டதில் அதன் உடலில் விஷம் கலந்திருந்தது தெரியவந்தது. இதைய டுத்து தலைமறைவான லலிதா குறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
அப்போது அவர் குழந்தையை கொன்று விட்டு கள்ளக்காதலுடன் ஓட்டம் பிடித்தது தெரியவந்தது. இதையடுத்து லலி தாவை போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்து விசாரித்தனர்.
அப்போது அவர் போலீசாரிடம் அளித்த பரபரப்பு வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
எனக்கும் சிறுவாச்சூர் பகுதியை சேர்ந்த ஆனந்தன் என்பவருக்கும் சமீபகாலமாக பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது. 2 குழந்தைகள் இருந்தும் எனக்கு கணவர் இல்லாத ஏக்கத்தில் தனிமை என்னை வாட்டியது. இந்த நிலையில் நாங்கள் இருவரும் வீட்டில் உல்லாசமாக இருக்கும்போது குழந்தை தொடர்ந்து அழுதுள்ளான். இதனால் எனக்கு ஆத்திரம் தலைக்கு ஏறியது. உல்லாசத்தில் ஈடுபடும்போது இப்படி தொடர்ந்து தொல்லை கொடுக்கிறானே என்ற ஆதங்கம் எனக்கு ஏற்பட்டது.
கள்ளக்காதலுக்கு இடையூறாக எனது 1 1\2 வயது ஆண் குழந்தை இருப்பதாக கருதினேன். இதனால் எனது குழந்தைக்கு சம்பவத்தன்று பூச்சிக்கொல்லி மருந்தை கொடுத்து கொலை செய்ய திட்டமிட்டேன்.
பெற்ற குழந்தை என்றும் பாராமல் குழந்தைக்கு விஷம் கொடுத்தேன். பின்னர், அக்கம்பக்கத்தினர் குழந்தை எப்படி இறந்தது என்று கேட்பார்கள் என்று கருதி அதற்கு வலிப்பு வந்து விட்டதாக கூறியபடி ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்று விட்டேன். அங்கு குழந்தை இறந்த நிலையில் போட்டுவிட்டு நான் எனது கள்ளக்காதலனுடன் ஓடிவிட்டேன். பின்னர் போலீசார் என்னை கைது செய்து விட்டனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பின்னர் இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கள்ளக்காதல் விவகாரத்தில் ஒன்றரை வயது குழந்தையை இளம்பெண் கொலை செய்த சம்பவம் சேலத்தையே கதிகலங்க வைத்தது.