

விழுப்புரம்,
விழுப்புரம் அருகே பூவரசங்குப்பத்தை அடுத்த எஸ்.மேட்டுப்பாளையம் கிராமத்தில் ஓடும் தென் பெண்ணை ஆற்றில் விழுப்புரத்தைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் கள ஆய்வில் ஈடுபட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-
ஆய்வின்போது முதுமக்கள் தாழிகள் இருப்பது கண்டறியப்பட்டன. தொடர்ந்து மேற்பரப்பில் ஆய்வு செய்ததில் கருப்பு, சிவப்பு மண்பாண்டம் கண்டுபிடிக்கப்பட்டது. சிறிய அளவிலான மண்பாண்டம் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. உட்புறம் கருப்பு நிறத்திலும் வெளிப்பகுதி கருப்பு, சிவப்பு நிறங்களிலும் காணப்படுகிறது. மண்பாண்டத்தின் விளிம்பு மிகவும் மெல்லியதாகவும் கலைநயத்துடனும் அமைந்துள்ளது. மூடியுடன் கூடியதாகவும் இருக்கிறது.
ஈமச்சடங்கின்போது இறந்தவருடன் இத்தகைய பொருட்களும் வைத்துப் புதைக்கப்பட்டன. இதற்கு சான்றாக தாழிகளில் எலும்புகளும் காணப்படுகின்றன. இது 2,300 ஆண்டுகள் பழமைவாய்ந்ததாகும். தென்பெண்ணை ஆற்றில் எஸ்.மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள தொல்லியல் தடயங்கள் அழிவின் விளிம்பில் காணப்படுகின்றன. இவற்றை பாதுகாக்க மாவட்ட நிர்வாகமும், தொல்லியல் துறையும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.