பட்டாசு தீக்காயங்களுக்கு 24 மணி நேர சிகிச்சை: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிறப்பு ஏற்பாடு!

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 25 படுக்கைகளுடன் பிரத்யேக சிறப்பு சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
பட்டாசு தீக்காயங்களுக்கு 24 மணி நேர சிகிச்சை: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிறப்பு ஏற்பாடு!
Published on: 

சென்னை,

தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் தீக்காயங்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கும் வகையில், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 25 படுக்கைகளுடன் பிரத்யேக சிறப்பு சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. மேலும், அவசர சிகிச்சைப் பிரிவிலும் 5 படுக்கைகள் ஒதுக்கப்பட்டு, 24 மணி நேரமும் செயல்படும் வகையில் மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் வருகிற 8-ந்தேதி தீபாவளி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, பொதுமக்கள் பட்டாசுகள் உள்ளிட்ட பொருட்களை வாங்கி பண்டிகைக்குத் தயாராகி வருகின்றனர். சிறுவர்களும் இப்போதே பட்டாசுகளை வெடிக்கத் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், தீபாவளியின்போது பட்டாசுகளால் தீக்காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிறப்புப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.

25 படுக்கைகள்

மருத்துவமனை முதல்வர் டாக்டர் கவிதா அறிவுறுத்தலின்படி, தீக்காய சிகிச்சைப் பிரிவுத் தலைவர் டாக்டர் தேன்மொழி தலைமையில் இந்தப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மொத்தம் 25 படுக்கைகள் கொண்ட இந்தப் பிரிவில், ஆண்களுக்கு 12 படுக்கைகளும், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு 13 படுக்கைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

24 மணி நேரமும் செயல்படும்

இதுதவிர, அவசர சிகிச்சைப் பிரிவிலும் 5 படுக்கைகளுடன் தனிப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரிவு 24 மணி நேரமும் செயல்படும் வகையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. முதுநிலை மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்கள் உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் சுழற்சி முறையில் நாள் முழுவதும் பணியில் இருப்பார்கள்.

இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், “பட்டாசு வெடிப்பது தொடர்பான விழிப்புணர்வு பொதுமக்களிடையே அதிகரித்து வருவதால், கடந்த சில ஆண்டுகளாக தீபாவளியின்போது தீக்காயங்களால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகிறது. இந்த ஆண்டும் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படாது என நம்புகிறோம். இருப்பினும், அவசரத் தேவைகளை எதிர்கொள்ளும் வகையில் மருத்துவமனை முழுமையாகத் தயார் நிலையில் உள்ளது” என்றனர்.

மருத்துவர்கள் அறிவுரை

தீபாவளியைப் பாதுகாப்பாகக் கொண்டாட பொதுமக்களுக்கு மருத்துவர்கள் சில வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளனர். அதன்படி, பெரியவர்களின் கண்காணிப்பு இல்லாமல் குழந்தைகளைத் தனியாகப் பட்டாசு வெடிக்க அனுமதிக்கக் கூடாது. பட்டாசு வெடிக்கும்போது இறுக்கமான ஆடைகளைத் தவிர்த்து, தளர்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.

எதிர்பாராதவிதமாக தீக்காயம் ஏற்பட்டால், காயத்தின் மீது உடனடியாகத் தண்ணீரை ஊற்றி கழுவ வேண்டும். பின்னர், சுத்தமான பருத்தித் துணியால் காயத்தை மூடி, தாமதிக்காமல் அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று உரிய சிகிச்சை பெற வேண்டும்.

தீக்காயத்தின் மீது எண்ணெய், களிம்பு, காபித்தூள், மஞ்சள்தூள், பேனா மை உள்ளிட்டவற்றைப் பூசுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் மருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றி விழிப்புணர்வுடன் செயல்பட்டு, இந்தத் தீபாவளியைப் பாதுகாப்பாகக் கொண்டாட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

X