5 மாதங்களுக்கு பிறகு இயக்கப்பட்ட மெட்ரோ ரெயிலில் 3 நாட்களில் 24 ஆயிரம் பேர் பயணம்

5 மாதங்களுக்கு பிறகு இயக்கப்பட்ட மெட்ரோ ரெயிலில் 3 நாட்களில் 24 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
5 மாதங்களுக்கு பிறகு இயக்கப்பட்ட மெட்ரோ ரெயிலில் 3 நாட்களில் 24 ஆயிரம் பேர் பயணம்
Published on

சென்னை,

சென்னையில் 5 மாதங்களுக்கு பிறகு, கடந்த 7-ந்தேதி ஒரு வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் போக்குவரத்து தொடங்கி நேற்று முதல் முழு அளவில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை ரெயில்கள் இயக்கப்படுகிறது.

கடந்த 3 நாட்களில் 24 ஆயிரத்து 354 பயணிகள் பயணம் செய்துள்ளனர். இதில் பயண அட்டை (ஸ்மார்ட் கார்டு) பயன்படுத்தி 18 ஆயிரத்து 769 பயணிகளும், கியூ.ஆர். குறியீடு பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி 637 பயணிகளும் ரெயிலில் பயணம் செய்துள்ளனர்.

நோய் தொற்று பரவுவதை தடுப்பதற்காக, பயணிகளுக்கு ஒரு வழிப்பயண டோக்கன் வழங்குவது கட்டுப்படுத்தப்பட்டு உள்ளன. இருப்பினும் தவிர்க்க முடியாத நிலையில் தேவையின் அடிப்படையில் சுத்திகரிக்கப்பட்டு டோக்கன்கள் வழங்கப்படுகிறது.

நிர்வாகத்துடன் ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் பயணிகள் தங்கள் செல்போன்களில் மெட்ரோ ரெயில் செயலியை பதிவிறக்கம் செய்து அதன் மூலம் கியூ.ஆர். குறியீடு பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி கொள்ளலாம். அதேபோல் சுரங்க ரெயில் நிலையங்களில் குளிர்சாதன வசதிகள் பாதுகாப்புடன் இயக்கப்படுகிறது.

மேற்கண்ட தகவலை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com