‘கடந்த 12 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்’ - எல்.முருகன்

பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியாவில் 2.50 லட்சம் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வந்துள்ளதாக எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
‘கடந்த 12 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்’ - எல்.முருகன்
Published on: 

சென்னை,

தமிழகத்தில் த.வெ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக பிரதமர் மோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னை வந்தார். அவர் இங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலமாக இன்று காலை 10.58 மணிக்கு சென்னை விமான நிலையத்துக்கு வந்தடைந்தார்.

விமான நிலையம் வந்த பிரதமர் மோடியை முதல்-அமைச்சர் விஜய் நேரில் சென்று வரவேற்றார். அதனை தொடர்ந்து அமைச்சர்கள், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர்.

தொடர்ந்து சென்னை ஐ.ஐ.டி.யில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, 13 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். குறிப்பாக, 3 ஆயிரத்து 700 கோடி ரூபாய் மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். சுமார் 750 கோடி ரூபாய் மதிப்பிலான ரெயில்வே திட்டங்களை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி, புனரமைக்கப்பட்ட 5 ரெயில் நிலையங்களை திறந்து வைக்கிறார்.

இதற்கான விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் நாட்டுப்பண் பாடப்பட்டநிலையில், அடுத்ததாக தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டது. விழா மேடையில் பிரதமர் மற்றும் முதல்-அமைச்சருடன் மத்திய இணை மந்திரி எல்.முருகன் மற்றும் அமைச்சர் என்.ஆனந்த் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் வரவேற்புரை ஆற்றியபோது எல்.முருகன் பேசியதாவது;-

“பிரதமர் மோடி தொடர்ந்து 25 ஆண்டுகள் முதல்-மந்திரியாகவும், பிரதமராகவும் பொது வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளார். அந்த 25 ஆண்டுகளை கொண்டாடும் விதமாக அவர் தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறார். தமிழக மக்களாகிய நாம் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுப்போம்.

பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் கடந்த 12 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 4 கோடி பேருக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. இந்தியா முழுவதும் 11 கோடி விவசாயிகளுக்கு விவசாய சன்மான நிதி கொடுக்கப்பட்டுள்ளது. சுமார் 10 கோடி சகோதரிகளுக்கு இலவச கேஸ் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியாவில் 2.50 லட்சம் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வந்துள்ளன. தமிழகத்தின் வளர்ச்சிக்காக மட்டும் 15 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு நமக்கு கொடுத்திருக்கிறது.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com