

திருநெல்வேலி,
திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் அருகே சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் பகுதியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜான்சன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், சுப்பிரமணியபேரி விலக்கு அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த உதயத்தூரை சேர்ந்த நவீன்குமார் (வயது 31) என்பவரை போலீசார் சோதனை செய்தனர்.
அதில் அவர் அரசால் தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய 250 கிராம் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து ராதாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு மேற்சொன்ன வாலிபரை கைது செய்து, அவரிடமிருந்து 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுத்து வருகிறார்.