திருவேங்கடம் அருகே அகழாய்வில் 2,500 ஆண்டுகள் பழமையான சதுர வடிவ கிணறு கண்டுபிடிப்பு

சங்ககாலத்தை சேர்ந்ததாக கருதப்படும் சதுர வடிவ படிக்கிணறு என்ற பெரிய செங்கல் கட்டமைப்பை அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
திருவேங்கடம் அருகே அகழாய்வில் 2,500 ஆண்டுகள் பழமையான சதுர வடிவ கிணறு கண்டுபிடிப்பு
Published on

தென்காசி,

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகா காரிசாத்தான் பஞ்சாயத்து மலையடிப்பட்டி மலையின் கீழ் பகுதியில் வைப்பாறு ஆற்றின் வலக்கரையில் தொல்பொருள் ஆய்வு துறையினரால் அகழாய்வு நடைபெற்று வருகிறது. இந்த தளத்தில் சங்ககாலத்தை சேர்ந்ததாக கருதப்படும் சதுர வடிவ படிக்கிணறு என்ற பெரிய செங்கல் கட்டமைப்பை மாநில தொல்லியல் துறை அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்தக் கிணறு தலா 4 மீட்டர் நீளமும், அகலமும் கொண்டதாக உள்ளது. கிணற்றுக்குள் இறங்குவதற்கு கற்களாலான படிக்கட்டுகள் உள்ளன. தமிழ்நாட்டில் கண்டெடுக்கப்பட்ட முற்கால வரலாற்றுக் காலத்தை சேர்ந்த முதல் செங்கல் படிக்கிணறு இதுவே எனவும், இந்த செங்கற்கள் 40 செ.மீ. நீளமும் 20 செ.மீ. அகலமும், 7 செ.மீ. தடிமனும் கொண்டவையாக உள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

கீழடி, அழகன்குளம், பூம்புகார் போன்ற பிற தளங்களில் கண்டெடுக்கப்பட்ட செங்கற்களின் அளவு மற்றும் அமைப்புடன் இவை ஒத்துப்போவதன் அடிப்படையில், இந்த கட்டமைப்பு சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய சங்க காலத்தை சேர்ந்ததாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், "இந்த கிணற்றுக்குள் இதுவரை 2 மீட்டர் ஆழம் வரை சென்றுள்ளோம். தொடர் அகழ்வாராய்ச்சிகளுக்கு பிறகே கிணற்றின் முழு ஆழம் தெரியவரும். அதேபோல் இங்கு அதிக தகரம் பூசப்பட்ட வெண்கலப் பொருட்கள், இரும்பு பொருட்கள், சுடுமண் பொருட்கள், முதுமக்கள் தாழி, சிவப்பு பூச்சு பூசப்பட்ட பானை, நுண்கற்கால கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன” என்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com