போலி ஆவணங்கள் மூலம் 260 ஏக்கர் நிலம் பதிவு: சார்பதிவாளரிடம் பொதுமக்கள் புகார்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் 260 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்து ஆக்கிரமித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
புகார் மனு
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டாரத்திற்கு உட்பட்ட மேல்மாந்தை கிராமப் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிறுவனம், அந்தப் பகுதியில் உள்ள சுமார் 260 ஏக்கர் நிலப்பரப்பை முறையான வழிகாட்டுதல்களின்றி, போலி ஆவணங்களை அச்சு அசலாகத் தயாரித்து பத்திரப்பதிவு செய்து ஆக்கிரமித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்களின் வாழ்வாதார நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது.

இந்த சட்டவிரோத நில ஆக்கிரமிப்பு பத்திரப்பதிவை மீன்வளத்துறை மற்றும் வருவாய்த்துறை விதிகளின்படி உடனடியாக ரத்து செய்யக் கோரியும், ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை மீட்டுத் தர வலியுறுத்தி தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வடக்கு மாவட்ட செயலாளர் பாபு மற்றும் புரட்சி பாரதம் கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் லெனின்குமார் ஆகியோர் தலைமையில், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் விளாத்திகுளம் சார்பதிவாளர் அலுவலகத்தில் திரண்டனர்.

அதைத் தொடர்ந்து அங்கு பணியில் இருந்த விளாத்திகுளம் பத்திரப்பதிவு அலுவலர் ஆதிலட்சுமியிடம் கோரிக்கை மனுவை நேரில் வழங்கி, உரிய நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் வலியுறுத்தினர். இந்த நிகழ்ச்சியில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் விளாத்திகுளம் ஒன்றிய செயலாளர் மாரிச்செல்வம் மற்றும் இரு கட்சிகளையும் சேர்ந்த முக்கிய பிராந்திய நிர்வாகிகள், உள்ளூர் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com