தமிழகத்தில் உள்ள அரசு கலை கல்லூரிகளில் 28-ந்தேதி மாணவர் சேர்க்கை - கல்லூரிக்கல்வி இயக்குனர் அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை வருகிற 28-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் (செப்டம்பர்) 4-ந்தேதிவரை நடைபெறும் என்று கல்லூரிக்கல்வி இயக்குனர் சி.பூரணசந்திரன் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள அரசு கலை கல்லூரிகளில் 28-ந்தேதி மாணவர் சேர்க்கை - கல்லூரிக்கல்வி இயக்குனர் அறிவிப்பு
Published on

சென்னை,

தமிழகத்தில் உள்ள 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் விண்ணப்பப்பதிவு நடைபெற்று முடிந்தது. சுமார் 92 ஆயிரம் இடங்களுக்கு, 3 லட்சத்து 12 ஆயிரத்து 883 பேர் விண்ணப்பித்ததில், 2 லட்சத்து 25 ஆயிரத்து 819 பேர் கட்டணம் செலுத்தியுள்ளனர்.

விண்ணப்பங்கள் அந்தந்த கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், மாணவர் சேர்க்கை குறித்தும், அப்போது பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் குறித்தும் கல்லூரிக்கல்வி இயக்குனர் சி.பூரணசந்திரன், அனைத்து கல்லூரிகளுக்கும் அனுப்பியுள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது:-

அந்தந்த கல்லூரி முதல்வர்கள் தான் மாணவர் சேர்க்கை குழுவுக்கு பொறுப்பு. மாணவர் சேர்க்கைக்கான உரிய ஆவணங்கள் மாணவர்களால் பதிவேற்றம் செய்யப்படாமல் இருப்பின், மாணவர்களால் பதிவு செய்யப்பட்டுள்ள செல்போன் எண்களின் மூலம் தொடர்பு கொண்டு தேவைப்படும் ஆவணம் மற்றும் சான்றிதழ்களை இணையவழியில் பெற்று சரிபார்த்தல் வேண்டும்.

ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும் இடஒதுக்கீட்டு நெறிமுறைகளின்படி, தகுதி வாய்ந்தோர் பட்டியல் தவறாது தயார் செய்யப்பட வேண்டும். ஒரு மாணவர் ஒன்றுக்கும் மேற்பட்ட தகுதியுள்ள பாடப்பிரிவுகளுக்கு தேர்வு செய்யப்பட்டால் அதனை கண்டறிந்து, அந்த மாணவரை செல்போனில் தொடர்பு கொண்டு அவருடைய விருப்பத்தின் அடிப்படையில், ஒப்புதல் கடிதம் பெற்று ஒதுக்கீட்டு ஆணை தயார் செய்யவேண்டும்.

அவரை தொடர்பு கொள்ள முடியவில்லையென்றால், மாணவர் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விருப்பவரிசை அடிப்படையில் ஒதுக்கீட்டு ஆணை தயார் செய்யலாம். அரசின் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் குறைந்தது ஒரு இடத்துக்கு 2 மாணவர்களை தேர்வு செய்து சான்றிதழ்களை சரிபார்த்து இறுதி சேர்க்கை பட்டியலை தயார் செய்ய வேண்டும்.

ஒவ்வொரு பாடப்பிரிவுகளுக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவர்களுக்கு அவ்விவரத்தினையும், மாணவர் சேர்க்கை வழிமுறைகளையும், கட்டண விவரங்களையும் 26-ந்தேதிக்குள் தெளிவாக தெரிவிக்க வேண்டும். சிறப்பு பிரிவினருக்கான சேர்க்கையை 28-ந்தேதியும், பொதுப்பிரிவினருக்கான மாணவர் சேர்க்கையை 29-ந்தேதி முதல் அடுத்த மாதம் (செப்டம்பர்) 4-ந்தேதிக்குள் முடிக்க வேண்டும். இது முதற்கட்ட மாணவர் சேர்க்கை ஆகும்.

மாணவர் சேர்க்கை கட்டணத்தை மின்னணு முறையிலும் செலுத்த வசதிகளை முதல்வர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். மாணவர் சேர்க்கைக்கு, மாணவர்கள் தங்கள் விருப்பத்தின் அடிப்படையில் நேரிலோ அல்லது அருகில் உள்ள வேறு அரசு கலைக்கல்லூரிக்கோ சென்று, சேர்க்கைக்கான ஆணையினை சமர்ப்பித்து, சேர்க்கை கட்டண ரசீது, அசல் சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க வேண்டும். இதனை தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவர்களுக்கு உரியமுறையில் கல்லூரி முதல்வர்கள் தெரியப்படுத்த வேண்டும்.

மாணவர் சேர்க்கையின் போது கொரோனா தொடர்பாக நடைமுறையில் உள்ள முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடைமுறைகளை தவறாது பின்பற்ற வேண்டும். மாணவர் சேர்க்கை மையங்களுக்கு பெற்றோரை அழைத்துவர வேண்டாம் என அறிவுறுத்த வேண்டும். கடந்த கல்வியாண்டில் பின்பற்றியதை போல 20 சதவீதம் கூடுதல் இடங்களுக்கு அரசின் ஒப்புதல்கோரப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com