

ராமேஸ்வரம்,
தமிழகத்தில் நிவர் மற்றும் புரெவி புயல்கள் காரணமாக கடல் சீற்றம் அதிகரித்து காணப்பட்டதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி வந்தது. இந்த நிலையில் தற்போது காற்றின் வேகம் குறைந்து மீண்டும் இயல்பு நிலை திரும்பியுள்ளதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல துவங்கியுள்ளனர்.
அந்த வகையில் ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று காலை ஐநூறுக்கும் மேற்பட்ட விசைப்படகுகளில், ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். பிற்பகல் நெடுந்தீவுக்கும், கச்சத்தீவுக்கும் இடையே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, ரோந்துக் கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் மூன்று படகுகளையும், அதில் இருந்த 22 மீனவர்களையும் சிறைபிடித்து, காங்கேசன் துறை கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர். இதேபோல், கச்சத்தீவு அருகே பழுதாகி கிடந்த படகையும், அதில் இருந்த ஏழு மீனவர்களையும் இலங்கைக் கடற்படையினர் சிறைபிடித்து, மன்னார் பகுதிக்கு கொண்டு சென்றனர்.
இதில், பழுதாகி நின்ற படகை இலங்கை கடற்படையினரின் ரோந்துக் கப்பல் சுற்றிவரும் காட்சி தற்போது வெளியாகியுள்ளது. மேலும் கொரோனா அச்சம் காரணமாக கைது செய்த மீனவர்களை கரையில் இறக்காமல் படகிலேயே வைத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.