போலீஸ் வேலைக்கு தமிழகம் முழுவதும் 2.99 லட்சம் பேர் தேர்வு எழுதினர்

தமிழகம் முழுவதும் போலீஸ் வேலைக்கான எழுத்து தேர்வை 2.99 லட்சம் பேர் எழுதினார்கள். 50-க்கும் மேற்பட்ட திருநங்கைகளும் இந்த தேர்வில் கலந்து கொண்டனர்.
போலீஸ் வேலைக்கு தமிழகம் முழுவதும் 2.99 லட்சம் பேர் தேர்வு எழுதினர்
Published on

சென்னை,

தமிழக காவல் துறையில் 3,552 இரண்டாம் நிலை காவலர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட உள்ளனர். சிறைத்துறையில் 161 வார்டர்களும், தீயணைப்பு துறையில் 120 தீயணைப்பு வீரர்களும் இதுபோல புதிதாக தேர்வாக உள்ளனர். இதற்காக 3 லட்சத்து, 66 ஆயிரத்து, 727 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களில் ஆண்கள் 2 லட்சத்து 99 ஆயிரத்து 857 பேரும், பெண்கள் 66 ஆயிரத்து 811 பேரும் உள்ளனர். சென்னையில் 16 ஆயிரத்து 178 பேர் விண்ணப்ப மனுக்களை கொடுத்திருந்தனர். இவர்களில் ஆண்கள் 13 ஆயிரத்து 287 பேரும், பெண்கள் 2,882 பேரும் அடங்குவார்கள். சென்னையில் திருநங்கைகள் 9 பேர் விண்ணப்ப மனுக்கள் கொடுத்திருந்தனர்.

தமிழகம் முழுவதும், 59 திருநங்கைகள் விண்ணப்பம் செய்திருந்தனர். இவர்களுக்கு முதல் கட்டமாக நேற்று தமிழகம் முழுவதும் 295 இடங்களில் எழுத்து தேர்வு நடந்தது. சென்னையில் 16 மையங்களில் தேர்வு நடைபெற்றது.

உற்சாகமாக பங்கேற்பு

நேற்று நடந்த எழுத்து தேர்வில் 2 லட்சத்து 99 ஆயிரத்து 820 ஆண், பெண் விண்ணப்பதாரர்கள் உற்சாகமாக பங்கேற்றனர். திருநங்கைகளும் 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டார்கள். 81.76 சதவீதம் பேர் தேர்வை எழுதியதாக தெரியவந்துள்ளது.

முதலில் தமிழ் தகுதி தேர்வும், அடுத்து பொதுவான தேர்வும் மொத்தம் 2 மணி நேரம், 40 நிமிடங்கள் நடந்தது. கேள்வித்தாள் ஒரே கேள்வித்தாளாக இருந்தது. தமிழ் தகுதி தேர்வுக்கான கேள்விகள் அதில் தனியாக இடம் பெற்று இருந்தது. தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்களில் பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள், என்ஜினீயரிங் பட்டதாரிகள் நிறைய பேர் இருந்தனர். பெண்களில் கர்ப்பிணி பெண்கள் கூட தேர்வு எழுதி சென்றனர். கைக்குழந்தைகளுடன் பெண்களில் சிலர் தேர்வு எழுத வந்திருந்தனர். தேர்வு மையத்திற்குள் செல்போன் கொண்டு செல்ல அனுமதி இல்லை. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் இந்த தேர்வுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com