திருச்செந்தூரில் 2-வது நாளாக உள்வாங்கிய கடல்

திருச்செந்தூர் கடலில் புனித நீராடிவிட்டு கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
திருச்செந்தூரில் 2-வது நாளாக உள்வாங்கிய கடல்
Published on

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். அவர்கள் கடலில் புனித நீராடிவிட்டு கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். பொதுவாக அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி, நவமி போன்ற கனத்த நாட்களில் திருச்செந்தூரில் கடல் திடீரென உள்வாங்கும். மேலும் சீற்றத்துடனும் காணப்படும்.

குறிப்பாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கும், அய்யா வைகுண்டர் அவதாரபதிக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில், அதற்கு முந்தைய மற்றும் பிந்தைய நாட்களில் காலையில் கடல்நீர் உள்வாங்குவதும், மாலையில் இயல்புநிலைக்கு திரும்புவதும் வழக்கமாக நடைபெற்று வருகிறது.

நேற்று பவுர்ணமி என்பதால் காலையில் திருச்செந்தூர் கோவில் பகுதியில் கடல் சுமார் 60 அடி தூரம் உள்வாங்கி காணப்பட்டது. இந்த நிலையில் இன்று 2-வது நாளாக திருச்செந்தூர் கடல் சுமார் 100 அடி தூரம் உள்வாங்கியது. இதனால் கடலின் உள்ளே இருந்த பாசி படர்ந்த பாறைகள் வெளியே தென்பட்டன. மேலும் நீண்ட தூரம் கடல் உள்வாங்கியதால் அலைகள் இன்றி குளம் போல் காட்சியளிக்கிறது.

இருப்பினும் கோவிலுக்கு வந்த பக்தர்கள் எந்தவித அச்சமும் இன்றி வழக்கம்போல் கடலில் புனித நீராடிவிட்டு கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் கடலில் நின்று பக்தர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com