13 நாட்களில் 2-வது மரண தண்டனை தீர்ப்பு: நெல்லை போக்சோ கோர்ட்டு நீதிபதி அதிரடி


13 நாட்களில் 2-வது மரண தண்டனை தீர்ப்பு: நெல்லை போக்சோ கோர்ட்டு நீதிபதி அதிரடி
x

கோப்புப்படம்

சிறுமியை கர்ப்பமாக்கிய கொடூர தந்தைக்கு தூக்கு தண்டனை விதித்து நெல்லை சிறப்பு கோர்ட்டு அதிரடி தீர்ப்பு கூறியது.

நெல்லை,

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே மரம் வெட்டும் தொழிலாளியாக வசிக்கும் ஒருவர், தனது இரண்டாவது மனைவிக்கு பிறந்த 15 வயது மகளை 2024-ம் ஆண்டு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, கடந்த பிப்ரவரி மாதம் அவருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அந்தப் பரிசோதனையில், அவர் ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்தது கண்டறியப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக வள்ளியூர் மகளிர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், குற்றவாளியின் டிஎன்ஏவும், கருவில் உருவான குழந்தையின் டிஎன்ஏவும் தடயவியல் ஆய்வில் ஒத்துப்போனது உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு திருநெல்வேலி போக்சோ கோர்ட்டில் நடைபெற்றது.

வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், நேற்று அளித்த தீர்ப்பில், "குறைந்தபட்ச தண்டனை வழங்க நினைத்தாலும், பாதிக்கப்பட்ட குழந்தையும், அவரது தாயும் உச்சபட்ச தண்டனை கோரியுள்ளனர். சொந்த மகளையே பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்கு இந்த கோர்ட்டு குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதிக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டது.

13 நாட்களில் 2-வது மரண தண்டனை தீர்ப்பு

நெல்லை போக்சோ சிறப்பு கோர்ட்டில், நீதிபதி சுரேஷ்குமார் கடந்த டிசம்பர் மாதம் 24-ந் தேதி, பெற்ற மகளையே கர்ப்பமாக்கிய 47 வயது தொழிலாளிக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். அந்த தீர்ப்பு வழங்கி சரியாக 13 நாட்களுக்கு பிறகு (அதாவது நேற்று) பெற்ற மகளை நாசமாக்கிய விறகு வெட்டும் தொழிலாளிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு அளித்து உள்ளார்.

இதுதவிர கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26-ந் தேதி 4 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டு இருக்கிறார். அதாவது, கடந்த 2014-ம் ஆண்டு தென்காசி மாவட்டம் திருவேங்கடம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட உடைப்பங்குளம் பகுதியில் 3 பேர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் பொன்னுமணி, குருசாமி, முத்துகிருஷ்ணன், காளிராஜ் ஆகிய 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்தார்.

அதேபோல் நெல்லை பாளையங்கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பாளையஞ்செட்டிகுளத்தை சோ்ந்த வைகுண்டம் என்பவர், ஒரு வழக்கில் சாட்சி சொல்ல இருந்த நிலையில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய செல்வராஜ் என்பவருக்கும் கடந்த மார்ச் மாதம் 6-ந் தேதி மரண தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்தார்.

இதுதவிர 2019-ம் ஆண்டு சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்து அவனை கல்லால் தாக்கி கொன்ற மாயாண்டி என்பவருக்கு கடந்த 2024-ம் ஆண்டு நவம்பர் மாதம் 5-ந் தேதி சாகும் வரை சிறை தண்டனையும், கடந்த 2023-ம் ஆண்டு பள்ளி மாணவியை மிரட்டி கர்ப்பமாக்கிய ஜகுபர் உசேன் என்பவருக்கு ஜூலை 15-ந் தேதி சாகும்வரை சிறை தண்டனையும் விதித்து நீதிபதி சுரேஷ்குமார் உத்தரவு பிறப்பித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story