சென்னை எண்ணூரில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது

வாலிபர்களின் பைக் சாகசம் வாகன ஓட்டிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
சென்னை எண்ணூரில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது
Published on

எண்ணூர்,

சென்னை எண்ணூர் தாழங்குப்பம் கடற்கரை சாலையில் தினந்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் சில இளைஞர்கள் அதிவேகமாக மோட்டார் சைக்கிள்களை இயக்குவதுடன், ஒற்றை சக்கரத்தில் ஓட்டுவது, கைகளை விட்டபடி ஒட்டுவது உள்ளிட்ட பல்வேறு ஆபத்தான சாகசங்களில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.

இந்த சாகசங்களை வீடியோவாக பதிவு செய்து, இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் 'ரீல்ஸ்' ஆக பதிவிட்டு, தங்களை பிரபலப்படுத்திக்கொள்ளும் முயற்சியிலும் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வகையான சாகசங்கள், சாலையில் செல்லும் பிற வாகன ஓட்டிகளின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

இதனால் குடும்பத்துடன் பயணிக்கும் மற்ற வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். எனவே, ஆபத்தான சாகசங்களில் ஈடுபடும் இளைஞர்களை போலீசார் கண்காணித்து, அவர்களது மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்வதுடன், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில், சென்னை எண்ணூர் தாழங்குப்பம் கடற்கரை பகுதியில் ஆபத்தான முறையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பைக் சாகசம் செய்து இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்ட ஆகாஷ், பிரவீன் குமார், தினேஷ் பாபு ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் 3 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

X

Daily Thanthi
www.dailythanthi.com