

கோவை,
கோவை குறிச்சி ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் சதாம் ஹுசைன். நர்சரி வைத்து நடத்தி வருகிறார். இவரது நண்பர்கள் கார்மல் நகரை சேர்ந்த பைசல், கரும் புக்கடை அண்ணா காலனியை சேர்ந்த பாரூக், கரும்புக் கடையை சேர்ந்த காஜாமைதீன் என்ற ஹக்கிம். இவர்களது வீட்டில் போதைப்பொருட்கள் பதுக்கி வைத்து இருப்பதாகவும், கள்ளநோட்டுகள் அச்சடிப்பதாகவும் கோவை மாநகர தெற்கு துணை கமிஷனர் கார்த்திகேயனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவரது உத்தரவின்பேரில், தனிப்படை போலீசார் சதாம் ஹுசைன் வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது அங்கு ரூ.200 கள்ளநோட்டுகள் 184 எண்ணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் நடத்திய சோதனையில் போதை மாத்திரைகள், உயர்ரக போதைப்பொருளான மெத்தபெட்டமைன் ஆகியவையும் சிக்கின. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அதில் பறிமுதல் செய்யப்பட்ட கள்ளநோட்டின் மதிப்பு ரூ.36,800 ஆகும்.
இதனைத்தொடர்ந்து அங்கு இருந்த கள்ளநோட்டு அச்சடிக் கும் எந்திரத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து சதாம் ஹுசைன், பைசல், காஜாமைதீன் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைதானவர்கள் மீது 8 பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கைதானவர்களுக்கு கள்ளநோட்டு அச்சடிக்கும் எந்திரம் எப் படி கிடைத்தது. யார் வாங்கி கொடுத்தார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.