

சென்னை,
குறைந்த வட்டிக்கு கடன் வாங்கி தருவதாகக்கூறி பலரிடம் ரூ.100 கோடி வரை மோசடி செய்ததாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை அண்ணா நகரை சேர்ந்தவர் மணிவண்ணன். தொழிலதிபரான இவர், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் பரபரப்புப் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த லயன் முத்துவேல் என்பவர் எனக்கு அறிமுகமானார். எனது தொழில் வளர்ச்சிக்காக பணம் தேவைப்பட்டது. லயன் முத்துவேல் தனக்கு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நிறைய பேரை தெரியும் என்றும், அவர்கள் மூலமாக குறைந்த வட்டிக்கு ரூ.50 கோடி கடன் வாங்கித் தருவதாகவும் தெரிவித்தார். அதற்கு அவர் கமிஷன் தொகையாக ரூ.2 கோடியை என்னிடம் வாங்கினார். ஆனால் அவர் சொன்னபடி ரூ.50 கோடி கடனை வாங்கித்தரவில்லை.
நான் கொடுத்த ரூ.2 கோடியையும் திருப்பித் தரவில்லை. இதுகுறித்து கேட்டபோது. அவர் என்னை மிரட்டுகிறார். அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மோசடி நபர் லயன் முத்துவேலை நேற்று முன்தினம் ஆந்திர மாநிலம் ஓங்கோலில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவரது கூட்டாளிகளான ஜெகன், திருக்குமரன் ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். இவர்கள் 3 பேரும் கடன் வாங்கித்தருவதாக பலரிடம் ரூ.100 கோடி வரை மோசடி செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.