

பீளமேடு,
தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராமன் (வயது 46). இவர் கோவை கணபதி பகுதியில் வசித்து வருகிறார். ராமன் ஜியோ டிஜிட்டல் நிறுவனத்தில் பகுதி மேலாளராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று பீளமேடு அருகே ஹோப் காலேஜில் இயங்கி வரும் ஜியோ ஸ்டோரில் விலை உயர்ந்த 6 செல்போன்கள் திருட்டு போனது.
அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, மர்மநபர் செல்போன்களை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ராமன் அந்த ஸ்டோரின் மேலாளர் முருகன் என்பவரிடம் விசாரித்தார். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்ததால் சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக இந்த சம்பவம் குறித்து பீளமேடு போலீஸ் நிலையத்தில் ராமன் புகார் அளித்தார்.
இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த கடையின் மேலாளர் முருகன் என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் முருகன் தனது நண்பர்களான சுந்தராபுரத்தை சேர்ந்த வினு பிரசாத் (34), அம்மன்குளம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் (44) ஆகியோருடன் சேர்ந்து விலைஉயர்ந்த செல்போன்களை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.