

கொடைக்கானல்,
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நகருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியை சேர்ந்த நிஜாமுதீன் என்பவர் விலை உயர்ந்த பைக்கில் சுற்றுலா வந்தார். அங்கு அவர் அண்ணாசாலை பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கினார். அப்போது அவர் தனது பைக்கை சாலையின் ஓரம் நிறுத்தி விட்டு அறைக்கு சென்றார்.
பின்னர் மறுநாள் காலையில் திரும்பி வந்து பார்த்தபோது தனது பைக்கை மர்மநபர்கள் திருடி சென்று விட்டனர். இதுகுறித்து கொடைக்கானல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர்.
இந்நிலையில் ஆனந்தகிரி 4-வது தெரு பகுதியில் நேற்று போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சுற்றித்திரிந்த 3 வாலிபர்களை போலீசார் சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர்.
இதையடுத்து 3 வாலிபர்களையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் கேரள சுற்றுலா பயணியின் விலை உயர்ந்த பைக்கை திருடியதும், அவர்கள் விழுப்புரம் வளவனூரை சேர்ந்த ஹரிஸ் ராஜ் (வயது 21), பெரியகுளம் வடகரையை சேர்ந்த ஆரிஸ் முகமது (19), அசாருதீன் (18) என்பதும் தெரியவந்தது.
மேலும் இவர்கள் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் போல் உலா வந்து முக்கிய பகுதிகளில் நோட்டமிட்டு விலை உயர்ந்த பைக்குகளை திருடியது விசாரணையில் அம்பலம் ஆனது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். திருடப்பட்ட பைக் பறிமுதல் செய்யப்பட்டது.