3 கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்து: தனியார் கல்லூரி நிர்வாகி உள்பட 4 பெண்கள் பலி

துவரங்குறிச்சி அருகே நடந்த பயங்கர விபத்தில் அடுத்தடுத்து 3 கார்கள் மோதிகொண்டன. இதில் தனியார் கல்லூரி நிர்வாகி, 2 மாணவிகள் உள்பட 4 பேர் பலியானார்கள்.
3 கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்து: தனியார் கல்லூரி நிர்வாகி உள்பட 4 பெண்கள் பலி
Published on

திருச்சி,

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர் தங்கசாமி (வயது 67). இவரது மனைவி மங்கையர்க்கரசி (64). இவர்களது உறவினர்களான பூஜா (20), ரஞ்சனா (20), பேரன் பிரதுன் (7) ஆகியோரை அழைத்துக்கொண்டு ராஜபாளையத்தில் இருந்து நேற்று மதியம் ஒரு காரில் புறப்பட்டு திருச்சியை அடுத்த நவல்பட்டில் உள்ள மருமகன் லட்சுமணன் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர்.

காரை தங்கசாமி ஓட்டி வந்தார். மதுரை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியை அடுத்த செவந்தம்பட்டி விலக்கு அருகே கார் வந்து கொண்டிருந்தது. இதற்கிடையில் திருச்சியை சேர்ந்த ராமகிருஷ்ணன் (65), அவரது மனைவி பத்மா (60) ஆகியோர் காரில் திருச்சியில் இருந்து மதுரை நோக்கி சென்றனர். காரை டிரைவர் மோகன் (45) என்பவர் ஓட்டினார்.

4 பெண்கள் பலி

இந்தநிலையில் தங்கசாமி ஓட்டி வந்த கார் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து சாலை மையதடுப்பை தாண்டி எதிரே உள்ள சாலைக்கு சென்று, மோகன் ஓட்டி வந்த கார் மீது மோதியது. இதனையடுத்து பின்னால் வந்த மற்றொரு காரும் அந்த கார்கள் மீது மோதியது.

இந்த விபத்தில் கார்களின் இடிபாடுகளில் சிக்கி மங்கையர்க்கரசி, ரஞ்சனா, பூஜா ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மோகன் ஓட்டிய காரில் வந்த பத்மா படுகாயத்துடன் மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

4 பேர் படுகாயம்

மேலும் படுகாயம் அடைந்த தங்கசாமி, அவரது பேரன் பிரதுன், ராமகிருஷ்ணன், டிரைவர் மோகன் ஆகியோர் தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்தில் இறந்த பூஜா, ரஞ்சனா ஆகியோர் ராஜபாளையம் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தனர். மேலும் விபத்தில் இறந்த பத்மா திருச்சி காட்டூரில் உள்ள ஒரு கல்லூரியில் சேர்மனாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com