

சென்னை,
சென்னை மயிலாப்பூரில் நடந்த வாலிபர் கொலை வழக்கில் 3 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலை செய்தது ஏன்? என்பது குறித்து அவர்கள் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.
சென்னை வேளச்சேரி, பாலாஜி நகரை சேர்ந்தவர் சத்தியசீலன் (வயது 20). டிப்ளமோ என்ஜினீயரிங் படித்துவிட்டு ஏ.சி. மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். ஆரம்பத்தில் சென்னை மயிலாப்பூர் வீரபத்திரன் தெருவில் இவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் கஞ்சா பழக்கத்துக்கு அடிமையானவர். கஞ்சா கும்பலோடு ஏற்பட்ட மோதல் காரணமாக இவர் மயிலாப்பூரை காலி செய்துவிட்டு வேளச்சேரிக்கு போய்விட்டார்.
நேற்று முன்தினம் இரவு, மயிலாப்பூர் வீரபத்திரன் தெருவில் வசிக்கும் தனது நண்பர் சபரி என்பவரை பார்த்து பேச வந்தார். அவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது, 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம நபர்கள் சத்தியசீலனை சரமாரியாக வெட்டி கொன்றுவிட்டு, தப்பி ஓடிவிட்டனர். மயிலாப்பூர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
சத்தியசீலனை கொலை செய்ததாக மயிலாப்பூர் பகுதியை சேர்ந்த அவ ருடன் ஒன்றாக பள்ளி படிப்பு படித்த 3 கல்லூரி மாணவர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் 17 வயது நிரம்பியவர்கள். சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் அவர்கள் 3 பேரும் முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகின்றனர்.
17 வயது நிரம்பியவர்கள் என்பதால் அவர்கள் பெயர் விவரத்தை போலீசார் வெளியிடவில்லை. சத்தியசீலனை கொன்றது ஏன்? என்பது குறித்து அவர்கள் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-
சத்தியசீலன் எங்களோடு ஒரே பள்ளியில் படித்தார். பள்ளியில் அவர் எங்களுக்கு சீனியர் ஆவார். பள்ளியில் படிக்கும்போதே அவருக்கும், எங்களுக்கும் மோதல் இருந்து வந்தது. அவர் சீனியர் என்பதால் எங்களிடம் அடிக்கடி சண்டையிட்டு அடித்து உதைப்பார். அதன் பிறகு அவர் வேளச்சேரிக்கு சென்று விட்டார்.
இருந்தாலும் தொடர்ந்து மயிலாப்பூர் பகுதிக்கு வந்து எங்களிடம் சண்டைபோடுவார். இதனால் அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தோம். அதற்காக காத்திருந்தோம். சம்பவத்தன்று இரவு அவர் மயிலாப்பூர் வீரபத்திரன் தெருவுக்கு வந்து அவரது நண்பரை பார்த்து பேசிக்கொண்டிருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்துக்கு சென்று அவரை அரிவாளால் வெட்டிகொன்று விட்டு தப்பி சென்றுவிட்டோம். இவ்வாறு அவர்கள் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இந்த படுகொலை சம்பவம் மயிலாப்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.