முத்துக்குடாவில் ரூ.3 கோடியில் சுற்றுலா பணிகள் மும்முரம்

முத்துக்குடாவில் ரூ.3 கோடியில் சுற்றுலா பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அலையாத்தி காட்டில் படகு சவாரி அமைக்கப்பட உள்ளது.
முத்துக்குடாவில் ரூ.3 கோடியில் சுற்றுலா பணிகள் மும்முரம்
Published on

கடற்கரை பகுதி

புதுக்கோட்டை மாவட்டத்தில் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், மணமேல்குடி உள்பட அதனையொட்டி கடற்கரை பகுதிகள் அமைந்துள்ளன. இதில் மீமிசல் அருகே முத்துக்குடா எனும் பகுதியில் அலையாத்தி காடுகள் காணப்படுகின்றன. இந்த முத்துக்குடாவை சுற்றுலா தலமாக மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதில் சுற்றுலா தலத்துடன், அலையாத்தி காட்டில் படகு சவாரி அமைக்கவும் திட்டமிட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்த சுற்றுலா பணிகள் ரூ.3 கோடியில் மேற்கொள்ளப்படுகிறது. முதற்கட்டமாக கடற்கரையொட்டி உள்ள பகுதியில் சுற்றுலா தலத்திற்கான இடமும், வாகனங்கள் நிறுத்துமிடம், நிர்வாக அலுவலக கட்டிடம், கழிவறை உள்பட அடிப்படை வசதிகளுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் தற்போது மும்முரமாக நடைபெறுகிறது.

படகு சவாரி

இந்த பணிகள் முடிவடைந்ததும் அடுத்ததாக 2-ம் கட்டமாக படகு சவாரிக்கான குழாம் அமைக்கப்பட உள்ளது. அலையாத்தி காட்டில் படகில் சென்று சுற்றுலா பயணிகள் சுற்றிப்பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படுகிறது.

இந்த பணிகளை வருகிற பிப்ரவரி மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து முத்துக்குடா சுற்றுலா தலம் பயன்பாட்டிற்கு வரும். இந்த சுற்றுலா தலம் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது. இதனால் முத்துக்குடா சுற்றுலா தல பணிகள் முடிவடைவது எப்போது என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com