

சென்னை,
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து நாளை (வியாழக்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஒரே கட்டமாக நடைபெறும் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான போட்டியில் 4,023 வேட்பாளர்கள் களத்தில் நிற்கின்றனர். அவர்களில் 3,579 பேர் ஆண்கள், 443 பேர் பெண்கள், ஒருவர் மூன்றாம் பாலினத்தவராகும்.
தமிழகத்தின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை தற்போது 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291 ஆகும். அவர்களில் 2 கோடியே 80 லட்சத்து 30 ஆயிரத்து 658 பேர் ஆண்கள், 2 கோடியே 93 லட்சத்து 4 ஆயிரத்து 905 பேர் பெண்கள், 7,728 பேர் மூன்றாம் பாலினத்தவராகும். தேர்தல் நடைபெற உள்ளநிலையில், தேர்தல் ஆணையம் கடுமையாக நடைமுறைகள் மற்றும் விதிகளை வெளியிட்டிருந்தது.
இதனிடையே மாநிலம் முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகள் தேர்தலுக்கு முன்பாக ஏப்.21 முதல் 23-ம் தேதி வரை 3 நாட்களும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 4ம் தேதியும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து 3 நாட்கள் மதுக்கடைகள் மூடப்படுவதால், நேற்று முன்தினமே மதுப்பிரியர்கள் 3 நாட்களுக்கும் சேர்த்து மதுபாட்டிகளை வாங்கிச் சென்றனர். இதனால் நேற்று முன்தினம் மட்டும் ரூ.400 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது ரூ.320 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது கூடுதலாக ரூ.80 கோடிக்கு விற்பனை நடைபெற்றுள்ளது.
தினமும் ரூ.140 கோடி முதல் ரூ.150 கோடிக்கு மது விற்பனை நடைபெறும் நிலையில், நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் ரூ.400 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.