திருட்டு கும்பலிடம் இருந்து 3 அடி உயர நடராஜர் உலோக சிலை மீட்பு

சிலை திருட்டு கும்பலிடம் இருந்து 3 அடி உயர நடராஜர் உலோக சிலை மீட்கப்பட்டது. மாறு வேடத்தில் சென்ற சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இந்த அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
திருட்டு கும்பலிடம் இருந்து 3 அடி உயர நடராஜர் உலோக சிலை மீட்பு
Published on

சென்னை,

தமிழகத்தில் உள்ள கோவில்களில் இருக்கும் சிலைகளை திருடி, தொன்மையான சிலைகள் என கூறி ஏமாற்றி சட்ட விரோதமாக வெளிநாடுகளுக்கு கடத்தி சில கும்பல் விற்பனை செய்து வருகிறது. இதுதொடர்பாக, சென்னை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்படி, திருச்சி சரக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாலமுருகன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் பிரேமா சாந்தகுமாரி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜேஸ், பாண்டியராஜன், காவலர்கள் பரமசிவம், சிவபாலன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

மாறுவேடத்தில் காத்திருப்பு

இந்த தனிப்படையினர் கோவை சென்று சம்பந்தப்பட்டவர்களிடம் சிலை வாங்குவது போல் பேசி, ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு கொண்டுவர கூறினர். அதன்படி, கடந்த 6-ந்தேதி அதிகாலை 5 மணிக்கு கோவையில் இருந்து பல்லடம் செல்லும் சாலையில் உள்ள இருகூரில் மாறுவேடத்தில் காத்திருந்தபோது, காரில் அந்த சிலையை கொண்டு வந்தனர்.

சுமார் 3 அடி உயரமுள்ள திருவாச்சியுடன் கூடிய நடராஜர் உலோகச் சிலையாக அது இருந்தது. அந்த சிலை குறித்து கேட்டபோது, முன்னுக்கு பின் முரணாக பேசியதால், காரில் வந்த 2 பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சிலையையும் பறிமுதல் செய்தனர்.

வெளிநாட்டில் விற்பனை செய்ய திட்டம்

போலீசில் சிக்கிய கார் டிரைவர் ஜெயந்த் (வயது 22) மேட்டூர் வி.டி.சி. நகரை சேர்ந்தவர். மற்றொருவர் கேரள மாநிலம் பாலக்காடு கல்லடத்தூரை சேர்ந்த சிவபிரசாத் நம்பூதிரி (53) ஆவார். இருவரும் இந்த நடராஜர் சிலையை வெளிநாட்டில் விற்பனை செய்வதற்கு திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட நடராஜர் சிலை தமிழகத்தில் எந்த ஊரில் உள்ள கோவிலில் இருந்து திருடப்பட்டது என்பது குறித்தும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com