நடுக்கடலில் 6 நாட்களாக தத்தளித்த 3 மீனவர்கள் பத்திரமாக மீட்பு

புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த வீரவேலுக்கு சொந்தமான பைபர் படகில், 3 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.
நடுக்கடலில் 6 நாட்களாக தத்தளித்த 3 மீனவர்கள் பத்திரமாக மீட்பு
Published on

கடலூர்,

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே உள்ள சண்முகாநகரை சேர்ந்தவர்கள் மனோகர்(வயது 27), ரமேஷ் (29) மற்றும் புதுச்சேரி கணபதி செட்டிக்குளம் பகுதியை சேர்ந்த நாகவேல் (40). இவர்கள் 3 பேரும், புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த வீரவேலுக்கு சொந்தமான பைபர் படகில், கடந்த 2-ம் தேதி கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர்.

ஆனால் இரவு வெகு நேரமாகியும் 3 பேரும் கரைக்கு திரும்பவில்லை. இதையடுத்து மாயமான 3 பேர் குறித்து பரங் கிப்பேட்டை போலீசார் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மாயமான 3 பேரையும், போலீசார் மற்றும் மீன்வளத் துறை அதிகாரிகள், தீயணைப்புத்துறை அதிகாரிகள் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

ஆனாலும் அவர்கள் கிடைக்கவில்லை. நேற்று முன்தினம் ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணி நடந்தது. ஆனாலும் அதற்கான பலன் கிடைக்கவில்லை. இதனால் மாயமான 3 பேரை நேற்று 2-வது நாளாக தீவிரமாக தேடும் பணி நடைபெற்றது. இதில் கடலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான கப்பலில் வீரர்கள் சென்று மாயமானவர்களை தேடும் பணியில் ஈடுபட்ட னர். மேலும் ஹெலிகாப்டர் மூலமாகவும் தேடுதல் வேட்டை நடந்து வந்தது.

இந்த நிலையில், நீண்ட தேடுதல் வேட்டைக்கு பின் நடுக்கடலில் 6 நாட்களாக தத்தளித்த மீனவர்கள் 3 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். தாழங்குடாவில் இருந்து 17 கடல் மைல் தொலைவில் தத்தளித்து கொண்டிருந்த மீனவர்களை கடலோர காவல்ப்படையினர் மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com