

சென்னை,
இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதிய டி20 உலகக்கோப்பை போட்டி சுமார் 27000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் சூழ நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.
இந்திய அணி நிர்ணயித்த 257 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய ஜிம்பாப்வே அணியில், தொடக்க வீரராக களமிறங்கிய 22 வயது இளம் வீரர் பிரையன் பென்னட், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் விளையாடிய அவர், 97 ரன்களுடன் டி20 உலகக்கோப்பையில் அதிக ரன்கள் அடித்த ஜிம்பாப்வே வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்தார்.
22 வயது பிரையன் பென்னெட் நடப்பு உலகக்கோப்பையில் 5 இன்னிங்சில் 3வது அரைசதத்தை பதிவுசெய்து அசத்தினார். நடப்பு டி20 உலகக்கோப்பையில் இந்தியாவிற்கு எதிராக மட்டுமில்லாமல் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 64* ரன்கள், இலங்கைக்கு எதிராக 63* ரன்கள் என, உலகக்கோப்பை வென்ற அணிகளையும் மிரளவைத்தார் பிரையன் பென்னட். இதன்மூலம் ஜிம்பாப்வே அணியின் கிரிக்கெட் எதிர்காலம் சிறந்த வீரரின் கையில் இருப்பதாக கிரிக்கெட் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.