கிருஷ்ணகிரியில் நகைக்கடை சுவரை துளையிட்டு 3 கிலோ வெள்ளி கொள்ளை

லாக்கரை உடைக்க முடியாததால் வெள்ளிப் பொருட்களை மட்டும் கொள்ளையர்கள் திருடிவிட்டுச் சென்றுள்ளனர்.
கிருஷ்ணகிரியில் நகைக்கடை சுவரை துளையிட்டு 3 கிலோ வெள்ளி கொள்ளை
Published on

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே வரட்டனப்பள்ளி பகுதியில் சரவணன் என்பவருக்கு சொந்த நகைக்கடை உள்ளது. இன்று காலை சரவணன் வழக்கம்போல் நகைக்கடையை திறப்பதற்காக வந்தார்.

அப்போது கடையின் பின்புற சுவரில் துளையிடப்பட்டு இருந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். கடையின் உள்ளே சென்று பார்த்தபோது, அங்கிருந்த 3 கிலோ வெள்ளி நகைகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இது குறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்த போலீசார், கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன் ஆதாரங்களை சேகரித்தனர்.

அப்போது கடையில் இருந்த இரும்பு லாக்கரை உடைக்க கொள்ளையர்கள் முயற்சி செய்துள்ளனர் என்பது தெரியவந்தது. அந்த லாக்கரின் சாவி அருகில் உள்ள ஆணியில் தொங்கவிடப்பட்டிருந்ததை கவனிக்காமல் கொள்ளையர்கள் இச்செயலில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் லாக்கரை உடைக்க முடியாததால் வெள்ளிப் பொருட்களை மட்டும் திருடிவிட்டுச் சென்றுள்ளனர். இதனால் லாக்கரில் இருந்த சுமார் 2 கிலோ தங்க நகைகள் நல்வாய்ப்பாக தப்பி இருக்கின்றன.

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுறை அங்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். நகைக்கடையில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com