பாலம் கட்ட அனுமதிக்க ரூ.3 லட்சம் லஞ்சம்: 2 நீர்வளத்துறை அதிகாரிகள் கைது

தனது விடுதி முன்பாக செல்லும் வாய்க்காலில் பாலம் கட்ட அனுமதி கோரி திருவாரூர் நீர்வளத்துறை அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.
கைது
Published on

திருவாரூர்,

தங்கும் விடுதிக்கு செல்ல வாய்க்காலில் பாலம் கட்ட ரூ.3 லட்சம் லஞ்சம் வாங்கிய நீர் வளத்துறை என்ஜினீயர்கள் 2 பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார் பொறி வைத்து பிடித்தனர்.

நீர்வளத்துறை அலுவலகம்

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை சேர்ந்த அபினேஷ் தங்கும் விடுதி கட்டி வருகிறார். தனது விடுதி முன்பாக செல்லும் வாய்க்காலில் பாலம் கட்ட அனுமதி கோரி திருவாரூர் நீர்வளத்துறை அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.

இந்த விண்ணப்பத்தை ஆய்வு செய்த நீர்வளத்துறை வெண்ணாறு வடிநிலக்கோட்ட உதவி செயற்பொறியாளர் மாணிக்கவேல்(வயது 46), உதவி என்ஜினீயர் வினோத்(36) ஆகியோர் பாலம் கட்டுவதற்கு அனுமதி வழங்க அபினேசிடம், லஞ்சமாக ரூ.3 லட்சம் கேட்டுள்ளனர்.

லஞ்ச ஒழிப்பு துறை

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத அபினேஷ் இது குறித்து திருவாரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் 1 போலீசார், லஞ்சம் கேட்ட நீர்வளத்துறை அதிகாரிகளை கையும், களவுமாக பிடிக்க முடிவு செய்தனர்.

இதற்காக ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை அபினேஷிடம் கொடுத்து இந்த பணத்தை லஞ்சம் கேட்ட நீர்வளத்துறை அதிகாரிகளிடம் வழங்குமாறு தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து நேற்று திருவாரூர் நீர்வளத்துறை அலுவலகத்திற்கு சென்ற அபினேஷ் அங்கிருந்த உதவி செயற்பொறியாளர் மாணிக்கவேல் மற்றும் உதவி பொறியாளர் வினோத் ஆகியோரிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்தார்.

அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு நந்தகோபால், இன்ஸ்பெக்டர்கள் சித்ரா, அனிதா மற்றும் போலீசார் திடீரென அலுவலகத்துக்குள் நுழைந்து உதவி செயற்பொறியாளர் மாணிக்கவேல் மற்றும் உதவி பொறியாளர் வினோத் ஆகியோரை கையும், களவுமாக பிடித்தனர். அவர்களிடம் இருந்து லஞ்சப்பணம் ரூ.3 லட்சத்தை பறிமுதல் செய்தனர். பிடிபட்ட 2 பேரிடமும் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com