சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவருக்கு 3 ஆயுள் தண்டனை - திருவள்ளூர் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு

கோப்புப்படம்
18 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்தவருக்கு 3 ஆயுள் தண்டனை விதித்து திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 36 வயது பெண் குடும்ப தகராறு காரணமாக கணவரை பிரிந்து தனது 2 பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்தார். அப்போது அவருக்கு நஜீப்தீன் என்கின்ற ராஜூவுடன் (40 வயது) பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த பெண் தனது பிள்ளைகளை விட்டு விட்டு ராஜூவுடன் சென்னை அடுத்த பூந்தமல்லியில் வசித்து வந்தார்.
பின்னர் 18 வயதுடைய தனது மகளை அந்த பெண் பூந்தமல்லிக்கு அழைத்து சென்றார். அங்கு ஒரே வீட்டில் 3 பேரும் வசித்து வந்தனர். ஒரு நாள் தனது மகளை, ராஜூவின் பாதுகாப்பில் விட்டு விட்டு அந்த பெண் வேலைக்கு சென்று விட்டார். இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ராஜூ, 18 வயது சிறுமியை வலுக்கட்டாயமாக மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார்.
மேலும் இரக்கமின்றி சிறுமியின் கழுத்தை நெரித்து படுகொலை செய்ததுடன் அவர் அணிந்து இருந்த நகைகள் மற்றும் வீட்டில் இருந்த பணத்தையும் எடுத்துக் கொண்டு தப்பி சென்றுவிட்டார். வேலை முடிந்து வீட்டுக்கு வந்த அவரது தாய், மகள் உடலில் காயங்களுடன் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியில் உறைந்து போனார்.
இந்த சம்பவம் குறித்து பூந்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து மும்பையில் தலைமறைவாக இருந்த ராஜூவை கைதுசெய்தனர். இந்த வழக்கு திருவள்ளூர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் வக்கீல் தமிழ் இனியன் வாதாடினார்.
நேற்று வழக்கு விசாரணை முடிந்த நிலையில் அனைத்து சாட்சியங்களுடன் குற்றம் நிரூபிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜூலியட் புஷ்பா, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்கு ஆயுள் தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும், கொலை செய்ததுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், வன்கொடுமை செய்த குற்றத்துக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், நகைகளை திருடிய குற்றத்திற்கு 3 வருடம் கடும் காவல் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து பூந்தமல்லி போலீசார் ராஜூவை புழல் சிறையில் அடைத்தனர்.






