சாத்தான்குளம் வழக்கை விசாரித்து முடிக்க மேலும் 3 மாதம் அவகாசம் - மதுரை ஐகோர்ட்டு

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கை இன்னும் 3 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் என்றும், இந்த வழக்கில் சிறையில் இருக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
சாத்தான்குளம் வழக்கை விசாரித்து முடிக்க மேலும் 3 மாதம் அவகாசம் - மதுரை ஐகோர்ட்டு
Published on

இரட்டை கொலை வழக்கு

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்தவர், ஜெயராஜ். இவருடைய மகன் பென்னிக்ஸ். இவர்கள் இருவரும் விசாரணைக்காக 2020-ம் ஆண்டு அங்குள்ள போலீஸ்நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். போலீசார் தாக்கியதில் படுகாயம் அடைந்து, பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. வழக்குபதிவு செய்தது. இதில் அப்போதைய சாத்தான்குளம் போலீஸ்நிலைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 9 போலீசார் கைதானார்கள். அவர்கள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் ஏற்கனவே பலமுறை தங்களுக்கு ஜாமீன் கேட்டு கோர்ட்டில் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடியாகின.

இன்ஸ்பெக்டர் ஜாமீன் மனு

இந்தநிலையில் சிறையில் உள்ள இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் தனக்கு ஜாமீன் கேட்டு மீண்டும் மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். ஏற்கனவே இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சி.பி.ஐ. வக்கீல் ஆஜராகி, சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு விசாரணையானது இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. இன்னும் சில சாட்சிகளை மட்டுமே விசாரிக்க வேண்டியுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள், தங்கள் மீதான வழக்கை இழுத்தடிக்கும் நோக்கில் 4 மாதங்களாக குறுக்கு விசாரணை என்ற பெயரில் வழக்கு விசாரணையை தாமதப்படுத்துகிறார்கள். ஒரு சாட்சியை விசாரணை செய்வதற்கு கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்கள் ஆகிறது.

3 மாதம் அவகாசம்

எனவே வருகிற மே மாத விடுமுறை காலத்திலும் இந்த வழக்கினை கீழ் கோர்ட்டு விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டும் என்றார். இதேபோல இறந்த ஜெயராஜின் மனைவி செல்வராணியும், ஸ்ரீதருக்கு ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவித்து இடைக்கால மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்களின் மீதான விசாரணையை முடித்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.

தள்ளுபடி-அவகாசம்

இந்தநிலையில் அந்த வழக்கின் தீர்ப்பை நேற்று நீதிபதி இளங்கோவன் பிறப்பித்தார். அதில, மனுதாரரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மேலும், சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கை இன்னும் 3 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவு பிறப்பித்து இருந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com