ஜெம் வீரமணி வழக்கில் மேலும் 3 பேர் கைது

ஜெம் வீரமணி பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜெம் வீரமணி வழக்கில் மேலும் 3 பேர் கைது
Published on: 

சென்னை,

ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வீரமணி, சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை அளித்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கு தமிழகத்தைத் தாண்டி தேசிய அளவிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த வழக்கில் இதுவரை முக்கியக் குற்றவாளியான வீரமணி மற்றும் அவரது கூட்டாளிகள் உட்பட மொத்தம் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் எவ்வளவு செல்வாக்கு மிக்கவர்களாக இருந்தாலும் தப்ப முடியாது. கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிடுள்ளார்.

முதல் அமைச்சரின் உத்தரவைத் தொடர்ந்து விசாரணை தீவிரமடைந்தது. இந்த வழக்கை விசாரிக்க 4 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

விசாரணை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், எஸ்ஐடி குழுவின் விசாரணை அதிகாரியாக இருந்த துணை ஆணையர் கீதாஞ்சலி அக்குழுவில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவருக்குப் பதிலாகச் சென்னை கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் கீதா புதிய விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். வீரமணி மீது இதுவரை 15-க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளித்துள்ள நிலையில், காவல் துறை தரப்பில் பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாகப் புகார் அளிப்பதற்காகச் சிறப்புப் புலனாய்வுக் குழு சார்பில் பிரத்யேக செல்போன் எண் (93453 19676) வெளியிடப்பட்டது. இந்த எண்ணுக்குத் தொடர்ந்து புகார்கள் வருகின்றன. அதன் அடிப்படையில் காவல் துறை அதிகாரிகள் ரகசிய விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில், இந்த வழக்கில் வீரமணிக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறப்பு புலனாய்வுக் குழு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு வெளியிட்ட அறிக்கையில், “சென்னை பெருநகர காவல் விபச்சார தடுப்பு பிரிவில் பெறப்பட்ட பென் டிரைவ்-ல் ஜெம் கிரானைட் தொழிலதிபர் வீரமணி என்பவர் சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹன் ஆகியோரது வீட்டின் படுக்கையறையில் சிறுமி ஒருவருடன் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக பென் டிரைவ்-வில் பதிவாகியிருந்த வீடியோவில் வீரமணி பாலியல் குற்றத்தில் ஈடுபட்டது தெரியவந்ததின் அடிப்படையில், சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவு, விபச்சார தடுப்பு பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பாக ஜெம் கிரானைட் தொழிலபதிர் வீரமணி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹன் ஆகியோர் கைது செய்யப்பட்டும் இவ்வழக்கில் வீரமணி சிறுமியிடம் ஆபாசமாக இருப்பது போன்ற மேலும் ஒரு வீடியோவை வைத்திருந்தது தொடர்பாக அதைப்பற்றி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காத குற்றத்திற்காக கணேசன் என்பவரும் கைது செய்யப்பட்டு, மேற்படி நான்கு பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

காவல்துறை இயக்குநர் / படைத் தலைவர், தமிழ்நாடு அவர்களின் உத்தரவின் பேரில் மேற்படி போக்சோ வழக்குகளில் விசாரணை மேற்கொள்ள சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு தீவிர புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஏற்கனவே ஜெம் வீரமணி மீது நான்கு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் மேலும் ஒரு வழக்கு 02.10.2026 பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணையில் உள்ளது.

மேற்படி ஐந்து வழக்குகளில் புலன் விசாரனை மேற்கொண்டதில், ஜெம் கிரணைட் தொழிலபதிர் வீரமணியின் பாலியல் துன்புறுத்தல்களுக்கு சிறுமிகளை அழைத்து வந்து உடந்தையாக இருந்த குற்றத்திற்காக, ஜெம் கிரணைட் வீரமணியின் ஓட்டுநர்கள் 1.லாசர், 2.பார்த்திபன் மற்றும் 3.பாபு ஆகியோர் அடையாளம் காணப்பட்டு இன்று (05.10.2026) கைது செய்யப்பட்டனர்.

மேற்கண்ட ஐந்து வழக்குகளில் சம்பந்தபட்ட ஜெம் கிரானைட் தொழிலபதிர் வீரமணியின் பாலியல் துன்புறுத்தல் குற்றத்திற்கு உடந்தையாக இருந்த ஓட்டுநர்கள் லாசர் என்பவர் 23 வருடங்களாகவும், பாபு என்பவர் 8 வருடங்களாகவும் மற்றும் பார்த்திபன் என்பவரும் பணிபுரிந்து வந்துள்ளனர்.

ஜெம் வீரமணியின் குற்ற செயல்களுக்கு துணை போனது பற்றியும், அது தொடர்பாக அவர்களுடைய வீடுகளில் சோதனைகள் நடத்தப்பட்டு, 8 செல்போன்கள் மற்றும் 55 ஆவணங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

இவ்வழக்கில் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெம் வீரமணி வழக்கில் அதிரடியாக குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜெம் வீரமணி குறித்து இன்னும் ரகசிய தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com