விநாயகர் சிலையை சேதப்படுத்திய 3 பேர் கைது: திருநெல்வேலி காவல்துறை விளக்கம்

விநாயகர் சிலையை சேதப்படுத்திய சம்பவத்தில் குற்றவாளிகள் மதுபோதையில் அச்செயலை செய்ததாக தெரியவந்துள்ளது என்று திருநெல்வேலி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
விநாயகர் சிலையை சேதப்படுத்திய 3 பேர் கைது: திருநெல்வேலி காவல்துறை விளக்கம்
Published on

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

களக்காடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட (நாங்குநேரி உட்கோட்டம்) ஜே.ஜே.நகர், மேலக் காலனி பகுதியில் விநாயகர் சிலை சேதப்படுத்தப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்கள் தொடர்பாக, தவறான தகவல்கள் பரவாமல் தடுக்கும் பொருட்டு பின்வரும் விபரங்கள் தெரிவிக்கப்படுகின்றன:

ஜே.ஜே.நகர், மேலக் காலனி, களக்காடு பகுதியைச் சேர்ந்த சுரேந்திரன் (வயது 43) அளித்த புகாரின் பேரில், களக்காடு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலக் காலனியில் இருந்த 2 அடி உயரம் கொண்ட வெற்றி விநாயகர் கல் சிலை சேதப்படுத்தப்பட்டு அகற்றப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் 26.2.2026 அதிகாலை நேரத்தில் நிகழ்ந்துள்ளது. காவல்துறை உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, குற்றச்சாட்டில் தொடர்புடைய நபர்களை விரைவாக கண்டறிந்தது. 2 குற்றவாளிகள் சம்பவம் நடைபெற்ற நாளிலேயே கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

மேற்சொன்ன குற்ற வழக்கில் தொடர்புடைய மேலும் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கின் புலன் விசாரணையில், குற்றவாளிகள் மதுபோதையில் இச்செயலை செய்ததாக தெரியவந்துள்ளது. இதற்குப் பின்னால் பெரிய சதி அல்லது வேறு நோக்கம் எதுவும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மற்றும் ஊடகங்கள் மேற்சொன்ன சம்பவம் தொடர்பாக உறுதி செய்யப்படாத தகவல்களை பரப்பாமல் இருக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தவறான தகவல்களை பரப்புவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com