கரூர் அருகே லாரி மீது கார் மோதியதில் 8 மாத கர்ப்பிணி உட்பட 3 பேர் உயிரிழப்பு

கோர விபத்தில் காரின் முன் பகுதி லாரியின் அடியில் சிக்கி உருகுலைந்தது.
கரூர் அருகே லாரி மீது கார் மோதியதில் 8 மாத கர்ப்பிணி உட்பட 3 பேர் உயிரிழப்பு
Published on

கரூர்,

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியைச் சேர்ந்த அரவிந்த் அவரது மனைவி ஜனனி மற்றும் 3 வயது பெண் குழந்தை துவிதாவுடன் பெங்களூரில் இருந்து காரில் சொந்த ஊருக்குச் சென்று கொண்டிருந்தனர். ஜனனி 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்த நிலையில், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஈசநத்தம் பிரிவு ரோடு அருகே கார் வந்துகொண்டிருந்தது.

அப்போது, சாலையைக் கடப்பதற்காகப் பதிவு எண் இல்லாத இருசக்கர வாகனம் ஒன்று திடீரென சாலையைக் கடந்துள்ளது. இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க, காரை ஓட்டி வந்த ஓட்டுநர் இடதுபுறமாக காரைத் திருப்பியுள்ளார். இதில் எதிர்பாராதவிதமாக, கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் நின்றுகொண்டிருந்த லாரியின் பின்புறத்தில் அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் காரின் முன் பகுதி லாரியின் அடியில் சிக்கி உருகுலைந்தது. இதில் காரில் பயணித்த அரவிந்த் (30), அவரது மனைவி ஜனனி (27) மற்றும் காரின் ஓட்டுநர் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 3 வயது பெண் குழந்தை மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த பாண்டித்துரை ஆகிய இருவர் படுகாயமடைந்தனர்.

விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அரவக்குறிச்சி போலீசார், உயிரிழந்த 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயமடைந்த 2 பேர் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லாரி மீது கார் மோதியதில் 8 மாத கர்ப்பிணி உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com