பைக் மீது லாரி மோதி கைக்குழந்தை உள்பட 3 பேர் படுகாயம்: கிராம மக்கள் சாலைமறியல்

அக்கா, தம்பி, கைக்குழந்தை ஆகிய 3 பேரும் ஆத்திகுளம்- மானங்காத்தான் சாலையில் சென்றபோது, அந்த வழியாக சென்ற லாரி எதிர்பாராதவிதமாக அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிளின் மீது மோதியது.
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே தெற்கு இலந்தைகுளம் பஞ்சாயத்து, ஆத்திகுளம் காலனி தெருைவச் சேர்ந்தவர் கற்பகராஜ். இவருடைய மனைவி அனிஷா (வயது 26). இவர்களுக்கு 9 மாத பெண் குழந்தை உள்ளது. நேற்று காலையில் அனிஷா தனது தம்பி இளையராஜாவின்(25) மோட்டார் சைக்கிளில் கைக்குழந்தையுடன் சென்றார்.
ஆத்திகுளம்-மானங்காத்தான் சாலையில் சென்றபோது, அந்த வழியாக தனியார் கிரஷரில் இருந்து தார் கலவை ஏற்றி சென்ற லாரி எதிர்பாராதவிதமாக அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிளின் மீது மோதியது. இதில் சாலையில் தூக்கி வீசப்பட்டதில் இளையராஜா, அனிஷா மற்றும் கைக்குழந்தை ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனே அவர்களை சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த நிலையில் ஆத்திகுளம் வழியாக தனியார் கிரஷர் லாரிகள், கல்குவாரி லாரிகள் அதிகளவில் அதிவேகமாக செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே அவற்றை மாற்று வழியாக இயக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உடனே கயத்தாறு தாசில்தார் சுந்தரராகவன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதாதேவி மற்றும் போலீசார், அதிகாரிகள் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாாிகள் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர்.






